ஓசூர்: தேன்கனிக்கோட்டை பஸ் ஸ்டாண்டில், நடைமேடை மற்றும் கழிப்பிடம் கட்ட பூமி பூஜை போடப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை பஸ் ஸ்டாண்டில் உள்ள நடைமேடை சீரமைப்பு பணி மற்றும் வணிக வளாகத்தில் மழைநீர் வெளியேற வசதியாக சிமெண்ட் தளம் அமைக்க, டவுன் பஞ்., பொது நிதியில் இருந்து, மூன்று லட்சத்து, 80 ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல், மூன்று லட்சத்து, 20 ஆயிரம் ரூபாய் மதிப்பில், தேன்கனிக்கோட்டை பஸ் ஸ்டாண்டில் இலவச கழிப்பிட வசதி செய்யப்பட உள்ளது. இப்பணிகளுக்கான பூமிபூஜை, டவுன் பஞ்., செயல் அலுவலர் நாகராஜன் தலைமையில் நேற்று நடந்தது. தேன்கனிக்கோட்டை நகர, அ.தி.மு.க., செயலாளர் நாகேஷ், கெலமங்கலம் ஒன்றிய அவைத்தலைவர் பழனிசாமி, டவுன் பஞ்., முன்னாள் துணைத்தலைவர் ராமன் உட்பட பலர் பங்கேற்றனர்.