ஓசூர்: ராயக்கோட்டையில், ஆய்வு மேற்கொண்ட மாவட்ட கலெக்டர் பிரபாகர், பள்ளி மாணவர்கள் சென்று வர பஸ் வசதி செய்யப்படும் என, உறுதியளித்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை பஸ் ஸ்டாண்டில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட கலெக்டர் பிரபாகர், தூய்மை பணி மேற்கொள்ள, ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். ராயக்கோட்டை அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில், தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில், தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதையும், குடிநீர் வசதி மற்றும் கழிப்பறைகள் தூய்மையாக பராமரிக்கப்படு கிறதா என, ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார். பள்ளியில் உள்ள இரு கட்டடங்களை சீரமைக்க, ஆசிரியர்கள் கேட்டு கொண்டதன்படி, பொதுப்பணித்துறை மூலம், சரி செய்ய உத்தரவிட்டார். பள்ளி அருகில் வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பள்ளி குழந்தைகள் சென்று வர வசதியாக, உரிய நேரத்தில், ராயக்கோட்டை முதல் சூளகிரி, கெலமங்கலம், மாரண்டஹள்ளி பகுதிகளுக்கு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்படும் என உறுதியளித்தார். ராயக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை பார்வையிட்ட கலெக்டர் பிரபாகர், மகப்பேறு தாய்மார்களிடம், சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து, கெலமங்கலம் ஒன்றியம், ஏரி சின்னகவுண்டன்ஹள்ளி கிராமத்தில் உள்ள, ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி அருகில் உள்ள பாழடைந்த கிணற்றை சுற்றி, மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை அமைக்க, வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும், வீடு வீடாக சென்று, தூய்மை மற்றும் சுகாதார பணிகளை பார்வையிட்டு, குடிநீர் தொட்டிகளை சுத்தமாக வைக்க மக்களிடம் அறிவுறுத்தினார்.