புன்செய்புளியம்பட்டி: தொடர் மழையால், பவானிசாகர் வனப்பகுதி பசுமைக்கு திரும்பியுள்ளது. இதனால், யானை உள்ளிட்ட வன விலங்குகள் தண்ணீர், உணவு தேடி வனத்தை விட்டு வெளியேறுவது குறைந்துள்ளது.
ஈரோடு மாவட்டம், பவானிசாகர் மற்றும் விளாமுண்டி வனப்பகுதியில் மலை குன்றுகளில் புல்வெளிகளும், அவைகளுக்கு இடையே தாழ்வான பகுதியில், மரங்களும் நீர் நிலைகளுடன் கூடிய பசுமை மாறா வனப்பகுதிகளும் உள்ளன. வனப்பகுதியில், குட்டை, தடுப்பணை உள்ளிட்ட நீர் ஆதாரங்கள் நிறைய உள்ளன. இப்பகுதியில், ஆண்டுதோறும், வன உயிரினங்களுக்கு தடையின்றி உணவு, குடிநீர் கிடைத்து வருகிறது. வெயிலால், வனப்பகுதியிலுள்ள மரங்கள் பசுமை இழந்து கருகியது. வன விலங்குகளுக்கு உணவு தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் கோடையில் யானைகள், உணவு, குடிநீர் தேடி, வனத்தை ஒட்டியுள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்து, வாழை உள்ளிட்ட விவசாய பயிர்களை நாசம் செய்தன. இந்நிலையில், கடந்த மூன்று வாரங்களாக பவானிசாகர் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக தொடர் மழை பெய்துள்ளது. இதையடுத்து, பவானிசாகர் வனப்பகுதி மீண்டும் பசுமைக்கு மாறியுள்ளது. வனக்குட்டை, தடுப்பணை உள்ளிட்ட நீர்நிலைகளில் போதிய தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால், வன விலங்குகளுக்கான உணவு, குடிநீர் தட்டுப்பாடு நீங்கியுள்ளது. இடம்பெயர்ந்த வன விலங்குகள், மீண்டும், பவானிசாகர் வனப்பகுதிக்கு திரும்ப துவங்கியுள்ளன. வனத்துறையினர் கூறுகையில், 'தொடர் மழையால், வறட்சி நீங்கி, வனப்பகுதி பசுமைக்கு மாறியுள்ளது. வன விலங்குகளுக்கான உணவு, குடிநீர் தேவை வனத்திலேயே பூர்த்தி செய்யப்படுவதால், வன விலங்குகள், குறிப்பாக யானைகள், வனத்தை விட்டு வெளியேறுவது குறைந்துள்ளது,' என்றனர்.