சென்னிமலை: சென்னிமலை பகுதியில், உள்ளாட்சி தேர்தல் தற்போதே களைகட்டி விட்டது. பிரசாரத்தை தொடங்கி, கிராமங்களில் வீடு வீடாக ஓட்டு கேட்க துவங்கியுள்ளனர்.
உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு, விரைவில் வரும் என எதிர்பாக்கப்படுகிறது. இந்நிலையில் ஈரோடு மாவட்டம், சென்னிமலை வட்டராத்தில் உள்ள, 22 கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிக்கும் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. முகாசிபிடாரியூர் கிராம பஞ்.,தலைவர் பதவி, ஓட்டப்பாறை, புதுப்பாளையம், குமாரவலசு, எக்கட்டாம் பாளையம், பசுவபட்டி ஆகிய கிராம பஞ்., தலைவர் பதவிகளுக்கு, தற்போதே ஓட்டு வேட்டையில் ஈடுபட தொடங்கி விட்டனர். முகாசிபிடாரியூர் முன்னாள் தலைவர் சிவசுப்பிரமணி ஆதரவுடன், அ.தி.மு.க., நிர்வாகி கேபிள் நாகராஜன் மற்றும், தி.மு.க., ஊராட்சி செயலாளர் ஆறுமுகம் ஆகியோர் போட்டியிட முடிவு செய்து பிரசாரத்தை துவக்கியுள்ளனர். 11 ஆயிரம் ஓட்டுகளுக்கு மேல் உள்ளதால், பிரசாரம் தொடங்கி உள்ளதாக கூறுகின்றனர். தினசரி காலண்டரில், சென்னிமலை முருகன் போட்டோ மற்றும் அவரின் போட்டோவுடன் அச்சடித்து, நாகராஜன் வினியோகம் செய்து வீடு வீடாக ஓட்டு வேட்டையாடி வருகிறார். ஓட்டப்பாறை கிராம பஞ்சாயத்து டவுன் பகுதியை ஒட்டி வருவதால், தலைவர் பதவிக்கு கிராக்கி அதிகம். முன்னாள் தலைவர், தி.மு.க., மனோகரன், அ.தி.மு.க., ஊராட்சி தலைவராக இருக்கும் தங்கவேல் ஆகியோர் போட்டியிடுவது உறுதியாகி பிரசாரத்தை துவக்கி விட்டனர். பசுபவட்டி பஞ்சாயத்தில் பெரியசாமி, சதீஸ்குமார் போட்டியிடுவதாக கூறி, ஓட்டு வேட்டையாடி வருகின்றனர். சென்னிமலை ஒன்றியம் முழுவதும், தேர்தல் அறிவிப்புக்கு முன்பே உள்ளாட்சி தேர்தல் களைகட்டி உள்ளது.