கோபி: பொதுமக்களின் கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்க கோரி, திருப்பூர் எம்.பி., சுப்பராயன், கோபி தாலுகா ஆபீசுக்கு நேற்று மனு கொடுக்க வந்திருந்தார். அப்போது அவருடன், கோபி தாலுகாவுக்கு உட்பட்ட, கொங்கர்பாளையம், பாரியூர், உடையாம்பாளையம், ஊஞ்சப்பாளையம் பகுதிகளை சேர்ந்த, நூற்றுக்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர். கோபி தாசில்தார் விஜயக்குமாரை சந்தித்து, சுப்பராயன், வீட்டுமனைக்கு பட்டா, முதியோர் உதவித்தொகை என மொத்தம், 62 மனுக்களை வழங்கினார். மனுவை பெற்ற தாசில்தார், தகுதியுள்ளவர்களுக்கு வழங்கி வருவதாக தெரிவித்தார்.
பின்னர் சுப்பராயன் நிருபர்களிடம் கூறியதாவது: கோபி மக்கள் என்னிடம் வழங்கிய மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தாசில்தாரை வலியுறுத்தினேன். குண்டேரிப்பள்ளம் அணை, மேட்டூர் அணையில், உபரிநீர் வீணாவது பல ஆண்டுகளாக தொடர்கிறது. இரு அணைகளில் இருந்து, வீணாகும் உபரிநீரை, அந்தியூர் மற்றும் பவானி ஒன்றிய பகுதி குட்டைகளில் நிரப்ப வேண்டும். இந்த இரு அணைகளின் பிரச்னை குறித்து, தமிழக முதல்வரை சந்தித்து மனுக்கள் வழங்கப்படும். மழைநீரை சேகரிக்கும் திட்டங்கள் இல்லாததால் தான், தமிழகத்தின் நிலத்தடி நீர்மட்டம் அபாயகரமான அளவை கடந்து செல்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.