கரூர்: ''தமிழக காவல் துறையில் உள்ள மதுவிலக்கு அமலாக்க பிரிவை, கள் விலக்கு காவல் துறை என, பெயர் மாற்ற வேண்டும்,'' என, கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி தெரிவித்தார்.
கரூரில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: உலக அளவில் மதுவிலக்கு கொள்ளை தோற்றுப் போயிருந்தாலும், அரசின் கொள்கை மதுவிலக்காக இருக்க வேண்டும். தமிழகத்தில் தீபாவளி பண்டிகையின் போது, 585 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடந்துள்ளது. ஆனால், உணவின் ஒரு பகுதியாக உள்ள கள்ளுக்கு தடை விதித்துள்ளனர். காவல் துறையில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு ஒன்றை வைத்து கொண்டு, அரசே மதுவை விற்பனை செய்கிறது. எனவே, தமிழக காவல் துறையில் உள்ள மதுவிலக்கு அமலாக்க பிரிவை, கள் விலக்கு காவல் துறை என பெயர் மாற்றம் செய்ய வேண்டும். வாழைத்தார் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுவதை தவிர்க்க, வாழைப்பழத்தில் உள்ள மூலப்பொருட்களை கொண்டு, மது தயாரிக்க அரசு முன் வரவேண்டும். அதிகக் கொழுப்புள்ள ஜங்புட் உணவு வகைகள், பள்ளி வளாகத்தில் விற்பனை செய்வதை தடுக்க, மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கை வரவேற்கத்தக்கது. நாட்டின் மொத்த மக்கள் தொகையில், 60 சதவீதம் பேர் விவசாயிகள். அவர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட வேண்டும். நடிகர்களுக்கு மட்டும் அரசியல் அறிவும், நாடாள தகுதியும் உள்ளது என்பதை ஏற்க முடியாது. அமெரிக்காவில் நடிகர் ரீகனுக்கு பிறகும், ஆந்திராவில் என்.டி.ராமராவுக்கு பிறகும் அரசியலில் நடிகர்களின் சகாப்தம் முடிவுக்கு வந்து விட்டது. தமிழகத்திலும் அந்த நிலை வரவேண்டும். வரும், 2020 ஜனவரி மாதத்தில், தமிழகத்தில் கள் இறக்கும் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.