கரூர்: கரூரில் சாலையின் நடுவே மின் கம்பங்கள் உள்ளதால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். கரூர் கவுரிபுரம் பகுதியில், வியாபார நிறுவனங்கள், மாவட்ட தி.மு.க., அலுவலகம், மருத்துவமனை மற்றும், 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இதனால், அந்த பகுதியில் வாகனப் போக்குவரத்து அதிகம் உள்ளது. இந்நிலையில், இங்கு சாலை நடுவே உள்ள மின் கம்பங்களால், வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இரவில் அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள், சாலை நடுவே மின் கம்பம் இருப்பது தெரியாமல், அதில் மோதி விபத்துக்குள்ளாகின்றனர். பள்ளி, கல்லூரி வாகனங்கள், மருத்துவமனைக்கு செல்லும் ஆம்புலன்ஸ்களும் கௌரி புரம் பகுதி வழியாக செல்வதால், அசம்பாவிதம் நேரும் முன், சாலை நடுவே உள்ள, மின் கம்பங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.