திண்டுக்கல், : திண்டுக்கல் மாநகராட்சியுடன் 10 ஊராட்சிகள் இணைப்பு திட்டம் காரணமாக, அப்பகுதிகளில் போட்டியிட கட்சி நிர்வாகிகள் தயக்கம் காட்டுகின்றனர்.திண்டுக்கல் நகராட்சி தரம் உயர்த்தப்பட்டு மாநகராட்சியாக உள்ளது. தனி அதிகாரி நியமிக்கப்பட்டு திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியத்தில் இருந்து 2 ஊராட்சிகள், ஆத்துார் ஊராட்சி ஒன்றியத்தில் 10 ஊராட்சிகள் என மொத்தம் 60 வார்டுகள் பிரித்து எண்ணிட்டு அரசுக்கு அனுப்பியுள்ளனர். விரைவில் மாநகராட்சி விரிவாக்கம் அரசாணையாக வெளியாக வாய்ப்புள்ளது.கட்சி நிர்வாகிகள் தயக்கம் இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தலில் திண்டுக்கல் 48 வார்டுகள் மற்றும் 10 ஊராட்சி உள்ள இடங்களுக்கு ஊரகப்பகுதி என்ற அடிப்படையில் உள்ளாட்சித் தேர்தல் வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு தேர்தல் நடக்க உள்ளது. தேர்தல் முடிவுக்குப்பின் 10 ஊராட்சிகள் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட கவுன்சிலர்கள், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சித்தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள் தங்களது பதவிகளை இழக்கும் நிலை ஏற்படும். இதனால் 10 ஊராட்சிப் பதவிகளுக்கு கட்சியினர் போட்டியிடலாமா, வேண்டாமா என்ற குழப்பத்தில் உள்ளனர்.மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ''திண்டுக்கல் மாநகராட்சி விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது. உள்ளாட்சி தேர்தலுக்கு தற்போதுள்ள 48 வார்டுகள் வரையறை செய்யப்பட்டுள்ளது. ஊராட்சிகள் இணைப்பால் ஏற்படும் சிக்கல் தொடர்பாக மாநிலத்தேர்தல் ஆணையத்திடம் தான் முறையிட வேண்டும்'' என்றார்.