கடலுார்:கடலுார் கோண்டூரில், தெருக்களில் சுற்றித்திரிந்த பன்றிகளை பிடித்த விவகாரம் தொடர்பாக, நகர்நல சங்க தலைவர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. இதனால் நகர் நலச்சங்கங்கள் திரண்டு எதிர்ப்பை தெரிவித்தன.
கடலுார் நகரில் பல இடங்களில் பன்றிகளை வளர்த்து வருகின்றனர். கோண்டூர், ராயல் நகர், சாவடி போன்ற இடங்களில் அதிகளவில் பன்றிகள் சுற்றித்திரிகின்றன. இவை மக்கள் வசிக்கும் பகுதியில் சுற்றித்திரிவதால், மூளைக்காய்ச்சல் உட்பட பல்வேறு நோய் ஏற்படுகிறது.இவற்றை தடைசெய்ய வேண்டும் என பல்வேறு நலச்சங்கங்கள் சார்பில் நகராட்சி மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் புகார் செய்யப்பட்டது. பி.டி.ஓ., அலுவலகத்தில் இருந்து பன்றிகளை பிடித்து புளுகிராசிடம் ஒப்படைக்க ஊராட்சி செயலருக்கு அறிவுறுத்தப்பட்டது.அதன்பேரில், கடந்த ஒன்றாம் தேதி, கோண்டூர் பகுதிகளில் இருந்த பன்றிகள் ஊராட்சி செயலர் முன்னிலையில், நகர்நலச்சங்க பிரதிநிதிகள் சேர்ந்து கூலி ஆட்கள் மூலம் பிடித்தனர். அப்போது பன்றி வளர்ப்போர் வாக்குவாதம் செய்தனர். அதனால் பிடித்த பன்றிகள் அதே இடத்தில் விடப்பட்டன.
அதை தொடர்ந்து பட்டியில் இருந்த 4 பன்றிகள் திடீரென இறந்து விட்டன.இந்த பன்றிகளை மர்ம நபர்கள் விஷம் வைத்து கொன்றிருக்கலாம் என பன்றி வளர்ப்போர் கருதினர். இதை அடுத்து, நகர் நல சங்கங்களின் தலைவர் வெங்கிடேசன் மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. இதனை அறிந்த நகர் நல சங்கங்களின் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் மருதவாணன், முன்னாள் கவுன்சிலர் சுப்புராயன் தலைமையில் பொது மக்கள் திரண்டு, கடலுார் புதுநகர் போலீஸ் நிலையத்தில் குவிந்தனர். இதனால் புதுநகர் போலீஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இன்ஸ்பெக்டர் உதயக்குமார் விசாரணை நடத்தி வருகிறார்.