கடலுார்:கடலுாரில் தடை செய்யப்பட்ட ஒரு டின் பிளாஸ்டிக் பொருட்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் சுகந்தன் தலைமையில், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் நல்லதம்பி, சந்திரசேகர், சுப்ரமணியன், ஏழுமலை, கொளஞ்சி, மாரிமுத்து, சுந்தரமூர்த்தி, நகராட்சி துப்புரவு ஆய்வாளர்கள் பிரபாகரன், சிவா, மேற்பார்வையாளர் பக்கிரி ஆகியோர் கடலுார் பஸ் நிலையத்தில் உள்ள கடைகளில் நேற்று ஆய்வு செய்தனர். தொடர்ந்து திருப்பாதிரிப்புலியூர், சின்ன வாணியர் தெருக்களில் உள்ள கடைகளில் ஆய்வு செய்தனர். அப்போது, அரசால் தடை செய்யப்பட்ட 1 டன் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் 50 கிலோ காலாவதியான உணவு பொருட்கள், 50 லிட்டர் செயற்கை வர்ணம் கலந்த குளிர்பானங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து அழித்தனர். பின்னர், ஓட்டல்களில் ஆய்வு செய்த குழுவினர், கெட்டுப்போன உணவு பொருட்களை பறிமுதல் செய்து அழித்தனர். தடை செய்யப்பட்ட பொருட்களை தொடர்ந்து விற்பனை செய்தாலோ, பயன்படுத்தினாலோ, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என கடைக்காரர்களை எச்சரித்து சென்றனர்.