பொள்ளாச்சி:பொள்ளாச்சியில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில், நான்கு கடைகளின் உணவு பாதுகாப்பு பதிவு உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.கோவை மாவட்ட நிர்வாகம், உணவு பாதுகாப்பு துறை அலுவலர் உத்தரவின் பேரில், பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, வால்பாறை, ஆனைமலை பகுதிகளில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள், புகையிலை பொருட்கள் விற்பனை குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள், சுப்புராஜ், செல்வபாண்டியன், சிவானந்தம், காளிமுத்து ஆகியோர் இரண்டு குழுக்களாக பிரிந்து, மளிகை, பெட்டி கடைகள், பீடா ஸ்டால், டீ கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என, ஆய்வு மேற்கொண்டனர்.உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கூறுகையில், 'பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, ஆனைமலை, வால்பாறை பகுதிகளில் மொத்தம், 48 கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.ஒன்பது கடைகளில் மொத்தம், 14 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.ஒன்பது கடைகளுக்கு உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டப்படி எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது. நான்கு கடைகளில், உணவு பாதுகாப்பு பதிவு உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.தொடர் கண்காணிப்பு மேற்கொள்ளப்படும்; எச்சரிக்கை மீறி விற்பனை செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.