கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள திறந்தவெளி இடங்களில், தொழிற்சாலையின் கழிவுகள் குவிக்கப்பட்டு வருவதால், நிலத்தடி நீர் மற்றும் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு வருகிறது.
அந்த இடங்களில், பல ஆண்டு காலமாக, இரவு நேரத்தில், தொழிற்சாலைகளின் கழிவுகள் மலை போல் குவிக்கப்பட்டு வருகின்றன.அந்தக் கழிவுகளால், சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. மேலும், கழிவுகளுடன் மழை நீர் கலந்து அப்பகுதிகளில் தேங்கி இருப்பதால், நிலத்தடி நீர் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
தொழிற்சாலைகளில் இருந்து கழிவுகளை வெளியேற்றும் சில ஒப்பந்ததாரர்கள், இது போன்ற அத்துமீறலில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது.கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாகத்தில் இயங்கி வரும், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலகத்தினர் உரிய நடவடிக்கை எடுத்து,
திறந்தவெளி இடங்களில், தொழிற்சாலை கழிவுகள் குவிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என, இயற்கை ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.