| 3 மாதத்துக்கு முன் மாயமான விவசாயி கிணற்றில் எலும்புக்கூடாக மீட்பு Dinamalar
3 மாதத்துக்கு முன் மாயமான விவசாயி கிணற்றில் எலும்புக்கூடாக மீட்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

15 நவ
2019
08:17

வாழப்பாடி: மூன்று மாதத்துக்கு முன் மாயமான விவசாயி, வாழப்பாடி அருகே, விவசாய கிணற்றில் எலும்புக்கூடாக மீட்கப்பட்டார்.


நாமக்கல் மாவட்டம், மங்களபுரம் அருகே, ஈஸ்வரமூர்த்திபாளையம், எள்ளுக்குட்டை மேட்டாங்காடு பகுதியைச் சேர்ந்த விவசாயி பூபதி, 50. அதே பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து, 35. இருவரும், கடந்த ஆக., 11ல், வீட்டிலிருந்து வெளியேறினர். இந்நிலையில், வாழப்பாடி அருகே, குமாரபாளையத்தில், உரிமமின்றி நாட்டு துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த மாரிமுத்துவை பிடித்து, வாழப்பாடி வனத்துறையினர், போலீசில் ஒப்படைத்தனர். மேலும், துப்பாக்கி வைத்திருந்ததாக வழக்குப்பதிந்த, வாழப்பாடி போலீசார், அவரை கைது செய்தனர். ஆனால், பூபதி வீடு திரும்பாததால், தன் கணவரை மீட்டுத்தருமாறு, அவரது மனைவி செல்வி, நாமக்கல் போலீஸ் எஸ்.பி., - மங்களபுரம் போலீஸ் ஸ்டேஷனில் புகாரளித்தார். இதனிடையே ஜாமினில் வெளிவந்த மாரிமுத்துவிடம், பூபதியின் உறவினர்கள் கேட்டபோது, குமாரபாளையத்தில் முயல் வேட்டையாட முயன்றபோது, வனத்துறையினரிடம் பிடிபடாமல் இருக்க, பூபதி தப்பிச்சென்றதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில், அங்குள்ள விவசாயி நடராஜனின் கிணற்றில், உடல் முழுவதும் சிதைந்து, எலும்புக்கூடு ஒன்று கிடப்பதாக, வேப்பிலைப்பட்டி வி.ஏ.ஓ., அருள் புகார்படி, வாழப்பாடி போலீசார், நேற்று முன்தினம் விசாரித்தனர். பின், பூபதியின் உறவினர்கள், குமாரபாளையம் சென்று பார்த்தபோது, எலும்புக்கூடாக கிடந்தது பூபதி என்பதை உறுதிப்படுத்தினர். வனத்துறையினரிடம் பிடிபடாமல் இருக்க, தப்பியபோது, கிணற்றில் தவறி விழுந்து இறந்தாரா, வேறு காரணமா என, போலீசார் விசாரிக்கின்றனர்.


 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X