பு.புளியம்பட்டி: தெங்குமரஹாடா கிராமத்துக்கு, இரண்டு நாட்களாக பஸ் இயக்காததால், கிராம மக்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
பவானிசாகர் வனப்பகுதி, மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில், அடர்ந்த வனப்பகுதியில் தெங்குமரஹாடா, அல்லிமாயாறு, கல்லாம்பாளையம் ஆகிய மூன்று வனகிராமங்கள் உள்ளன. இவற்றில், 1,200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். நீலகிரி மாவட்ட எல்லையில் உள்ள இக்கிராமங்களுக்கு, மாயற்றை கடந்துதான் செல்லமுடியும். மேலும், பவானிசாகர் வனப்பகுதி மண்சாலையில், 20 கி.மீ., பயணிக்க வேண்டும். இந்த சாலையின் குறுக்கே ஆங்காங்கே பள்ளங்கள், ஓடைகள், காட்டாறுகள் உள்ளன. தெங்குமரஹாடாவுக்கு தினமும் இரண்டு அரசு பஸ் இயக்கப்படுகிறது. பவானிசாகர் அணையில், 105 அடி வரை நீர் தேங்கியுள்ளதால், நீர்த்தேக்க பகுதியை ஒட்டியுள்ள, சுஜ்ஜில்குட்டை, பூதிக்குப்பை பகுதி அருகேயுள்ள இரண்டு பள்ளங்களில், மூன்று அடி உயரத்துக்கு தண்ணீர் தேங்கியுள்ளது. மூன்று நாட்களுக்கு முன், தெங்குமரஹாடா சென்ற அரசு பஸ், பள்ளத்தை கடக்கும்போது நீரில் சிக்கியதால், இரு நாட்களாக அரசு பஸ் இயக்கப்படவில்லை. இதனால் தெங்குமரஹாடா, அல்லிமாயாறு, கல்லாம்பாளையம் கிராம மக்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர். டெம்போ, லாரி உள்ளிட்ட வாகனங்களில், பவானிசாகர் மற்றும் சத்தியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு வந்து செல்கின்றனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது; பவானிசாகர் அணை நீர்மட்டம், 105 அடியை எட்டும் போது, நீர்த்தேக்க பகுதியை ஒட்டியுள்ள, பள்ளங்களில், மூன்று அடி உயரம் தண்ணீர் தேங்கும். லாரி, டெம்போ உள்ளிட்ட வாகனங்கள் பள்ளத்தில் உள்ள நீரை கடந்து சென்று வருகின்றன. ஆனால், அரசு பஸ்சை நிறுத்தி விட்டனர். இதனால் அவதிக்கு ஆளாகியுள்ளோம். வனச்சாலையை சீரமைக்க, சத்தியமங்கலம் மாவட்ட வன அலுவலகம் முன் நாளை (இன்று) காலை போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.