கிருஷ்ணகிரி: உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குனர்களுக்கு, மூன்று நாள் புத்தாக்கப்பயிற்சி முகாம் நடந்தது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில், கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில், உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குனர்களுக்கு, மூன்று நாள் புத்தாக்கப்பயிற்சி முகாம், கடந்த, 12ல் துவங்கியது. முகாமை, மாவட்ட விளையாட்டு அலுவலர் உமாசங்கர் துவக்கி வைத்தார். மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் வளர்மதி முன்னிலை வகித்தார். இப்பயிற்சி முகாமில், 50 உடற்கல்வி ஆசிரியர்கள் பங்கேற்றனர். இதில், நீச்சல், ஸ்குவாஷ், ஜிம்னாஸ்டிக்ஸ், வாள் சண்டை, குத்துச்சண்டை, டேக்வாண்?டா, சதுரங்கம், சாலை சைக்கிள், கடற்கரை கையுந்து பந்து, கேரம், சிலம்பம், வளைபந்து, ஜூடோ ஆகிய விளையாட்டுகளின் புதிய விதிமுறைகள் மற்றும் புதிய தொழில்நட்பங்கள் கற்றுத்தரப்பட்டன. சிலம்ப விளையாட்டின் கருத்தாளராக மாவட்ட சிலம்பாட்ட சங்க செயலர் பவுன்ராஜ் பணியாற்றினார். மேலும், தேசிய விளையாட்டு வீரர் மோகனபிரியா, பயிற்சியாளர் குருராகவேந்தர் உள்ளிட்டோர் செய்முறை பயிற்சிகளை செய்து காண்பித்தனர். நேற்று, பயிற்சி நிறைவு விழாவில், சி.இ.ஓ., முருகன், பயிற்சி முடித்த உடற்கல்வி ஆசிரியர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.