கரூர்: ஆத்துப்பாளையம் அணையில், தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், கிளை வாய்க்கால்கள் ஆக்கிரமிப்பால், பாசனத்திற்கு தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கரூர் மாவட்டம், கார்வழி அருகில் ஆத்துப்பாளையத்தில், 600 ஏக்கர் பரப்பளவில், 1985ல் அணை கட்டப்பட்டது. இதில், நொய்யல் ஆற்றின் உபரிநீர் மூலம், 19 ஆயிரத்து, 500 ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வந்தது. 1999ல் ஆற்றில் சாயக்கழிவு நீர் கலந்ததால், பாசனத்திற்கு தண்ணீர் திறக்க தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், கீழ்பவானி மற்றும் சின்னமுத்தூர் ஆகிய அணைகளில் இருந்து உபரிநீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டதன் காரணமாகவும், நொய்யல் ஆற்றில் அதிகளவில் தண்ணீர் வந்ததால், பல ஆண்டுகளுக்கு பின் ஆத்துப்பாளையம் அணை நிரப்பி வழிகிறது. தற்போது வழக்கு வாபஸ் பெற்றதால், கடந்த, 10ல் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பாசன கிளை வாய்க்கால் ஆக்கிரமிப்பால் சரியாக தண்ணீர் செல்லவில்லை என்ற புகார் எழுந்துள்ளது.
இது குறித்து, விவசாய சங்க நிர்வாகிகள் கூறியதாவது: 234.32 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட அணை நிரப்பியதால், 15 நாட்களுக்கு ஒருமுறை முறைவைத்து தண்ணீர் வழங்கினால் மூன்று மாதத்திற்கு வழங்க முடியும். இதன் மூலம் அஞ்சூர், துக்காச்சி, கார்வழி, தென்னிலை, முன்னூர், அத்திப்பாளையம், குப்பம், புன்னம், வேட்டமங்கலம், புஞ்சைபுகளுர், புஞ்சைத்தோட்டக்குறிச்சி உட்பட, 18 கிராமங்கள் பாசன வசதி பெறும். இங்கு, 20க்கும் கல்குவாரிகள் செயல்படுகின்றன. கடந்த, 19ம் ஆண்டுகளாக குவாரி பகுதியில் உள்ள கிளை வாய்க்கால்களில், நீர் இல்லாததால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அதில், பல இடங்களில் வாய்க்கால் மூடப்பட்டு பாதையாக மாற்றப்பட்டுள்ளது. மேலும், வாய்க்காலில் கற்கள் விழுந்து அடைப்பு ஏற்பட்டு, நீர் செல்ல முடியாமல் நிற்கிறது. எனவே பொதுப்பணிதுறையினர் ஆய்வு செய்து, ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பகுதிகளை மீட்டும், வாய்க்கால் அடைப்பு சரி செய்தும் பாசனத்திற்கு தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து, கீழ்பவானி வடிநில உப கோட்ட உதவி செயற்பொறியாளர் சுப்பிரமணி கூறியதாவது: நீண்ட நாட்களாக தண்ணீர் செல்லாத தால், பல இடங்களில் வாய்க்கால் அடைப்பு மற்றும் ஆக்கிரமிப்பு ஏற்பட்டுள்ளது. இதை ஆய்வு செய்து, சரி செய்யும் பணி நடந்து வருகிறது. இனி, ஆக்கிரமிப்பு நடக்காமல் கண்காணிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.