சென்னை:'சென்னையில் இரண்டு ஆழ்துளை கிணறுகளை முறையாக மூடவில்லை' என, பொய் குற்றச்சாட்டு கூறிய பெண்ணுக்கு, 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை, செம்பியத்தைச் சேர்ந்த ஜெயஸ்ரீ என்பவர், தாக்கல் செய்த மனு:செம்பியம், சுந்தர விநாயகர் கோவில் முதல் தெருவில், எட்டு வீடுகள் உள்ளன. ஆழ்துளை கிணறு தோண்ட, வீடுகளின் உரிமையாளர்கள் முடிவு செய்தனர்.இதற்கு நான் எதிர்ப்பு தெரிவித்தேன்.
ஏற்கனவே, 2 ஆழ்துளை கிணறுகள் உள்ளன. மேலும், இடவசதியும் இல்லை. ஆட்சேபித்தும் கேட்காமல், ஆழ்துளை கிணறு தோண்டினர். அதில், எதிர்பார்த்த பலன் கிடைக்காததால், மற்றொரு ஆழ்துளை கிணற்றை தோண்டினர். அதிலும் பலன் இல்லை.பின், அந்த ஆழ்துளை கிணறுகளை முறையாக மூடவில்லை. பிளைவுட் மற்றும் கற்களால், மூடி வைத்துள்ளனர். இது, பாதுகாப்பாக இல்லை.முறையாக மூடும்படி அதிகாரிகளுக்கும் புகார் அளித்தேன். எனவே, இரண்டு ஆழ்துளை கிணறுகளையும் முறையாக மூடும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனுவை, நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரித்தார். மாநகராட்சி ஆணையர் நேரில் ஆய்வு செய்து, அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து, மாநகராட்சி ஆணையர் அறிக்கை தாக்கல் செய்தார். இதை பரிசீலித்த பின், நீதிபதி ஜெயச்சந்திரன் பிறப்பித்த உத்தரவு: குடியிருப்பில் வசிப்பவர்களுடன், மனுதாரருக்கு சுமுகமான உறவு இல்லை. பொய்யான குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார்.மற்றவர்களுக்கு எதிராக, தெளிவற்ற குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார். எனவே, மனுதாரருக்கு, 25ஆயிரம் ரூபாய் வழக்கு செலவுத் தொகை விதிக்கப்படுகிறது.இவ்வாறு, நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.