தென்னை நார் உற்பத்தி தொழிலுக்கு அரசு'கிளஸ்டர்' அமைத்தால் ஏற்றுமதி சிறக்கும் உடுமலை:-தென்னை நார் உற்பத்தி தொழில்கள் புத்துயிர் பெற, கயிறு வாரியம் மூலம், 'கிளஸ்டர்' தொகுப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என, உற்பத்தியாளர்கள் எதிர்பார்த்துள்ளனர்.பொள்ளாச்சி, உடுமலை பகுதியில், சுமார் 1.2 லட்சம் ஏக்கரில் தென்னை சாகுபடி செய்யப்படுகிறது.
தென்னையிலிருந்து கிடைக்கும் பொருட்களை மதிப்பு கூட்டி விற்க, பல்வேறு வாய்ப்புகள் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருந்தது.இதனால், தேங்காய் மற்றும் கொப்பரை மூலமே, விவசாயிகள் வருவாய் பெற்று வந்தனர். இந்நிலையில், மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரிப்பு குறித்து மத்திய அரசு, கயிறு வாரியம் மூலம் விழிப்புணர்வு செய்தது. படிப்படியாக சிறு, குறு தொழில் அடிப்படையில், பல்வேறு பொருட்களை உற்பத்தி செய்ய விவசாயிகள் முன்வந்தனர்.கடந்த, 1990 முதல் பொள்ளாச்சி, உடுமலை பகுதியில் மஞ்சி எனப்படும் தென்னை நார் உற்பத்தி தொழிற்சாலைகள் துவங்கப்பட்டன. முதலில் குறைந்தளவு பழுப்பு நிற மஞ்சி நார் தயாரிக்கப்பட்டது.தற்போது, பொள்ளாச்சி, உடுமலை பகுதிகளிலிருந்து, ஆண்டுக்கு சராசரியாக, ஒரு லட்சம் டன் வரை தென்னை நார், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.கடந்த, 2013ம் ஆண்டு முதல், தென்னை நாரை விட கழிவு மஞ்சியில் இருந்து உற்பத்தியாகும், 'பித் பிளாக்' கட்டிகள் அதிகம் ஏற்றுமதி செய்யப்பட்டது. இவ்வாறு, அன்னிய செலாவணியை அதிகம் ஈட்டி தந்த தென்னை நார் தொழிற்சாலைகள், தற்போது பல்வேறு பிரச்னைகளால், பாதித்து வருகின்றன.தென்னை நார் ஏற்றுமதிக்கு மத்திய, மாநில அரசுகள், போதிய வழிகாட்டுதல்கள் வழங்குவதில்லை. இதனால், குறிப்பிட்ட சில நாடுகளின் 'பையர்'கள் நிர்ணயிப்பதே, அதிகபட்ச விலையாக மாறியது. சில நேரங்களில், செயற்கையாக விலை குறைக்கப்படுகிறது. பழுப்பு மற்றும் வெள்ளை நிற மஞ்சிக்கு நிரந்தர விலை இருப்பதில்லை. வறட்சி காரணமாக, தேங்காய் மட்டைகளுக்கு தட்டுப்பாடு, மின்தடை, தொழிலாளர் பற்றாக்குறை போன்ற காரணங்களால், உற்பத்தி செலவு பல மடங்கு அதிகரித்துள்ள நிலையில், மஞ்சியின் விலை இறங்கு முகத்தில் இருப்பதால், பல்வேறு தொழிற்சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளன.இதே போல், ஏற்றுமதி தரம் வாய்ந்த தென்னை நார், மிதியடி தயாரிப்பு மூலப்பொருளான, 'டூ பிளே' கயிறுகள் உற்பத்தி செய்யும், சிறு, குறு தொழிற்சாலைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.'கிளஸ்டர்' அவசியம்பொள்ளாச்சியில், தென்னை நார் தொழிலுக்கான 'கிளஸ்டர்'கள் வைக்கப்பட்டுள்ளன. ஆனால், உடுமலை பகுதியில், கயிறு வாரியத்தின் சிறப்பு திட்டங்கள் எதுவும் இதுவரை செயல்படுத்தப்படவில்லை.எனவே, தென்னை நார் உற்பத்தி சார்ந்த, தொழில்கள் குறித்த ஆய்வு, உற்பத்தி பொருள் இருப்பு மையம் போன்ற வசதிகளுடன், உற்பத்தியாளர்கள் பங்களிப்புடன் 'கிளஸ்டர்' அமைக்க, கயிறு வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.