உடுமலை:உடுமலை அரசு மருத்துவமனையில், பச்சிளம் குழந்தைகள் வாரத்தொடக்க விழா நடந்தது.உடுமலை அரசு மருத்துவமனையில், பச்சிளங்குழந்தைகள் வார விழா நேற்று துவங்கி, வரும், 21ம் தேதி வரை நடக்கிறது. தலைமை மருத்துவர் முருகன் தலைமை வகித்தார்.குழந்தைகள் நல டாக்டர் செல்வராஜ் பேசுகையில், ''பிறந்து, முதல் 28 நாட்களுக்குட்பட்ட குழந்தைகள் பச்சிளங்குழந்தைகளாகும். இக்காலம், குழந்தைகளுக்கு நெருக்கடியான காலமாகும்; விரைவில் நோய்த்தொற்று ஏற்படும் சூழல் உள்ளது. முதல் ஒரு மாதம், அக்குழந்தை ஆரோக்கியமாக வாழ, அடித்தளமாக உள்ளது. ஆரோக்கியமான குழந்தையால் தான், ஆரோக்கியமான மனிதனாக வாழ முடியும்,'' என்றார்.இம்முகாமில், தாய்மார்களுக்கு கர்ப்ப காலத்தில் கவனம், அடிப்படை பயிற்சி, சத்தான உணவு, மன அமைதி, விட்டமின் மாத்திரைகள் குறித்து விளக்கப்பட்டது.மருத்துவமனை பிரசவம், ஆரம்ப காலத்திலேயே குறைகளை கண்டறிந்து, மேல் சிகிச்சை மேற்கொள்ளுதல், முறையாக தடுப்பூசிகள் போடுதல், குழந்தைகள் வளர்ப்பு குறித்து, ஓவியங்கள், பட விளக்கங்கள் மற்றும் செயல்முறை பயிற்சி அளிக்கப்பட்டது. இதில், அரசு மருத்துவமனை டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் தாய்மார்கள் பங்கேற்றனர்.