பெ.நா.பாளையம்:பாலமலை மலைப்பகுதியில், குஞ்சூர்பதி அரசு பள்ளிக்கு செல்லும் பாதை சேதமடைந்துள்ளதால், அவ்வழியாக செல்லும் மாணவர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.பெரியநாயக்கன் பாளையம் ஒன்றியம், நாயக்கன் பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பாலமலை மலைப்பகுதியில் பெரும்பதி, பெருக்குப்பதி, குஞ்சூர்பதி உள்ளிட்ட மலைக் கிராமங்கள் உள்ளன.இதில், குஞ்சூர்பதி மலைக் கிராமத்தில் உண்டு, உறைவிடப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளிக்கு தினசரி வந்து செல்லும் மாணவர்களும் உள்ளனர். இங்குள்ள பெரும்பதி, பெருக்குப்பதி உள்ளிட்ட மலைக் கிராமங்களில் இருந்து, குஞ்சூர்பதியில் உள்ள அரசுப் பள்ளிக்கு வரும் தார் சாலை சேதமடைந்துள்ளது.இதனால், மாணவர்கள் மட்டுமல்லாமல், கிராம மக்களும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.குஞ்சூர்பதி மக்கள் கூறுகையில், 'பல ஆண்டுகளுக்கு முன் தார் சாலை அமைக்கப்பட்டது. தற்போது, சாலையில் ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன; சில இடங்களில் சாலையோரம் பிளந்துள்ளது. தெருவிளக்குகளும் இல்லை. யானைகள் நடமாடும் இப்பகுதியில் நடந்து செல்வது பெரும் ஆபத்தாக உள்ளது. எனவே, இந்த சாலையை செப்பனிடவோ அல்லது புதிய தார்சாலை அமைக்கவோ அரசு முன்வர வேண்டும்' என்றனர்.