எங்கள் வீடு நான்கு ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. தற்போது, காம்பவுண்ட் சுவர் கட்டிக்கொண்டிருக்கிறோம். காம்பவுண்ட் சுவருக்கும், வீட்டுக்கும் இடைப்பட்ட பகுதியில் கான்கிரீட் போட்டு டைல்ஸ் ஒட்டலாமா அல்லது பேவர் பிளாக் பதிக்கலாமா?- ஆர். அன்பரசன்,சிவராம் நகர்.நீங்கள் வீடு கட்டியிருக்கும் பகுதி முழுவதும் எல்லா வீடுகளும் கட்டப்பட்டுள்ளனவா அல்லது வீடுகளுக்கு இடையே காலி மனைகள் உள்ளனவா என்பதை தெரிவிக்கவில்லை. ஏனெனில், அருகில் நீர் தேங்கும் வாய்ப்புள்ளதா என்பதை பொறுத்து நாம் இரண்டில் ஒன்றை செயல்படுத்தலாம். அருகில் நீர் தேங்குமானால், நீங்கள் பேவர் பிளாக் போடுவது சிறந்தது. ஏனெனில் மண் மட்டம் சற்று இறங்கினாலும் பேவர் பிளாக்கை பிரித்து மீண்டும் சரியான மட்டத்தில் போட முடியும். கான்கிரீட் தளம் அமைத்தால், வெடிப்புகள் ஏற்பட வாய்ப்புண்டு.மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு அவசியம் என்கின்றனர். எங்கள் வீடு, 2.5 சென்ட்டில் முழுமையாக கட்டியுள்ளேன். இதில் எப்படி மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு அமைப்பது?- ஏ. பாலசேகர், இருகூர்.தற்போது மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு மிக மிக அவசியம். இது அரசின் உத்தரவு. இதை நாம் பயந்து செய்ய வேண்டிய விஷயம் அல்ல. நமது அடுத்த தலைமுறைக்கு நல்வாழ்வு அமைவதற்கான சூழலை ஏற்படுத்த வேண்டிய கடமை நமக்குள்ளது. பொதுவாக வீட்டை சுற்றி சிறிதளவு இடம் விட்டு கட்டினால்தான் வீட்டில் உள்ளவர்களுக்கு சுகாதாரமான காற்று, வெளிச்சம் ஏற்படும். இடமே விடாமல் கட்டுவது தவறான செயலாகும். அப்படி கட்டப்பட்டிருந்தால் அரசின் அனுமதியுடன் உங்கள் வீட்டின் முன்புறம் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை ஏற்படுத்தலாம்.