புதுக்கோட்டை: ஆசிய போட்டியில் தங்கம் வென்ற தடகள வீரர் - வீராங்கனைக்கு, புதுக்கோட்டை அரியநாச்சியம்மன் கோவிலில் நேற்று திருமணம் நடந்தது.
புதுக்கோட்டையைச் சேர்ந்த தடகள வீரர் லட்சுமணன், 31. ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். இவர், 22வது ஆசிய தடகளப் போட்டியில், 5,000 மீட்டரை, 14 நிமிடங்கள், 54.48 வினாடிகளில் கடந்து வெற்றி பெற்றார். புதுக்கோட்டையைச் சேர்ந்த தடகள வீராங்கனை சூர்யா, 29; ரயில்வேயில் பணியாற்றி வருகிறார். இவரது தந்தை லோகநாதன், தடகள பயிற்சியாளர். சூர்யா பல சர்வதேச போட்டிகளில் பங்கேற்று, 5,000 மற்றும் 10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில், தங்கம் உட்பட பல பதக்கங்களை வென்றுள்ளார். லட்சுமணனுக்கும், சூர்யாவுக்கும் திருமணம் செய்ய, இரு குடும்பத்தாரும் பேசி முடிவு செய்தனர். இதன்படி, புதுக்கோட்டை சாந்தநாத சுவாமி கோவில் அருகே உள்ள அரியநாச்சியம்மன் கோவிலில், இருவருக்கும் நேற்று திருமணம் நடந்தது. இதில் பல்வேறு தடகள வீரர்கள் பங்கேற்று, மணமக்களை வாழ்த்தினர்.