ஸ்ரீவில்லிபுத்துார் : வத்திராயிருப்பு அருகே பிளவக்கல் அணை பகுதியில் பெய்த கனமழையால் அணைக்கு எதிர்பாராத அளவிற்கு தண்ணீர் வரத்து ஏற்பட அதன் நீர் வெளியேற்றபட்டதால் ஓடைகளில் வெள்ளபெருக்கு ஏற்பட்டது.
பாலத்தில் ஏற்பட்ட அரிப்பால் அப்பகுதி வழியாக செல்ல மக்களுக்கு தடை விதிக்கப்பட்டது. பிளவக்கல் அணை பகுதி கிராமங்களில் நேற்று முன்தினம் இரவு 7:00 மணிமுதல் மழை பெய்தது. அதேநேரம் வனத்தின் பெய்த கனமழையால் பிளவக்கல் அணைக்கு இரவு 11:30 மணிக்கு வினாடிக்கு 3500 கனஅடி நீர் வரத்து ஏற்பட்டது. இதை எதிர்பார்க்காத பொதுப்பணித் துறை அதிகாரிகள் அணை சுற்றுப்பகுதி மக்களின் பாதுகாப்பு கருதி வினாடிக்கு 4500 கன அடிநீரை வெளியேற்றினர்.
நீர்வரத்து ஓடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது.இதனிடையே இரவில் விட்டு விட்டு பெய்தமழை திடீரென அதிகரித்ததால் நேற்று அதிகாலை 3:30 மணிக்கு அணைக்கு வினாடிக்கு 6200 கனஅடிநீர் வரத்து ஏற்பட்டது.இதையடுத்து அணையிலிருந்து 6500 கனஅடிநீர் வெளியேற்றபட்டது. ஏற்கனவே நீர்வரத்து ஓடைகளில் தண்ணீர் ஓடிக்கொண்டிருந்த நிலையில் கூடுதல் தண்ணீர் சென்றதால் ரோடு மற்றும் பாலத்திற்கு மேல் தண்ணீர் சென்றது.அரிப்பை தடுக்க மணல் மூடைஅளவு கடந்த வந்த தண்ணீரால் வனப்பகுதியில் கிடந்த மரக்கிளைகள் கழிவுகள் வெளியேறி பாலத்தின் கண்களை அடைத்ததால் ரக்மத்நகர் கோவிந்தன்மேடு பாலத்தில் அரிப்பு ஏற்பட்டது.
அப்பகுதி வழியாக செல்ல பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டது. போக்குவரத்தும் நிறுத்தபட்டது. அனைத்து துறை அதிகாரிகளும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டனர். கோவிந்தன்மேடு பாலத்தில் ஏற்பட்ட அரிப்பை தடுக்க மணல்மூடைகள் அடுக்கப்பட்டது. தற்போது பிளவக்கல் அணையில் 45.31 அடி தண்ணீர் உள்ளநிலையில் அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே வெளியேற்றபடுகிறது.
நேற்றிரவும் பெய்த மழையால் அணைக்கு வந்த நீரும் வெளியேற்றப்பட்டது. ஸ்ரீவி., செண்பக தோப்பு வனப்பகுதியில் மலை கொட்டியது. பல ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தான் இந்தளவிற்கு தண்ணீர் வரத்து ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.