புதுச்சேரி: புதுச்சேரியில் போக்குவரத்து போலீசார் வார விடுமுறை நாட்களுக்காக வழங்கப்பட்ட பிரத்யோக சீருடை அணிந்து பணியாற்றினர்.சுற்றுலா மாநிலங்களான கோவா, மணிப்பூரில் போக்குவரத்து போலீசாருக்கு தனியாக சீருடை வழங்கப்பட்டுள்ளது. அதை பின்பற்றி புதுச்சேரியிலும் போக்குவரத்து போலீசாருக்கு வார விடுமுறை நாட்களில் மட்டும் தனி சீருடை வழங்கப்பட்டுள்ளது.புதுச்சேரி போக்குவரத்து போலீசார் தற்போது, வெள்ளை நிற பேண்ட், சர்ட் மற்றும் சிகப்பு நிற தொப்பி அணிந்து வருகின்றனர். தற்போது வார மற்றும் அரசு விடுமுறை நாட்களில் அணிய, கருநீலம் மற்றும் வெள்ளை நிறத்துடன் கூடிய டி-சர்ட் மற்றும் நீல நிற தொப்பி வழங்கப்பட்டுள்ளது. இந்த புதிய சீருடையை கடந்த 13ம் தேதி முதல்வர் நாராயணசாமி, போக்குவரத்து போலீசாருக்கு வழங்கி இத்திட்டத்தை துவக்கி வைத்தார்.அதனையொட்டி, வார விடுமுறை தினமான நேற்று புதுச்சேரி போக்குவரத்து போலீசில் உள்ள இன்ஸ்பெக்டர்கள் முதல் கான்ஸ்டபிள் வரை அனைவரும், புதிய சீருடை அணிந்து பணியாற்றினர்.போலீசாரிடம் கேட்டபோது, வார விடுமுறை நாட்களில் போக்குவரத்து போலீசார் டிசர்ட் சீருடை அணிய, ஒவ்வொருவருக்கும் இரண்டு செட் சீருடை வழங்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளிடம் வித்தியாசமான உணர்வை ஏற்படுத்தும் நோக்கில், இந்த சீருடையில் பணியாற்றுவதாக தெரிவித்தனர்.