குஜிலியம்பாறை : பாளையம் - அரவக்குறிச்சி செல்லும் பஸ் முறையாக வராததால் பொது மக்கள் பாதிக்கப்படுவதாக குமுறல் எழுந்துள் ளது.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் இருந்து அரசு பஸ்ஒன்று ஆர்.வெள்ளோடு, சத்திரப்பட்டி, சேர்வைகாரன்பட்டி வழியாக பாளையம் வந்து செல்கிறது. தினமும் 4 முறை வருகிறது. இது இப்பகுதியினரின் போக்குவரத்துக்கு பெரும் உதவியாக உள்ளது. சமீப காலமாக இந்த பஸ், முக்கியமான சீசன் நேரங்களில் வராமல் நின்று விடுகிறது. இதுபற்றி கேட்டால், வெளியிடங்களுக்கு இயக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர். இதனால் இந்த வழித்தடத்தில் உள்ளவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
இது குறித்து காங்., செயற்குழு உறுப்பினர் ராமசாமி கூறுகையில், ''இந்த வழித்தடத்தில் இயங்கும் பஸ் ஒழுங்காக வருவதில்லை. அதேபோல் டவுன் பஸ்சுக்குப் பதிலாக, மொபசல் பஸ் இயக்கப்படுவதால் ஏறிஇறங்க சிரமப்படுவதுடன், கட்டணமும் கூடுதலாக உள்ளது. பொதுமக்கள் நலன்கருதி நிறுத்திய பஸ்சை முறையாக இயக்க வேண்டும்'' என்றார்.