நத்தம் : நத்தம் பஸ் ஸ்டாண்டில் இருந்து மதுரை, செந்துறை, அலங்காநல்லுார், அழகர்கோயில், லிங்கவாடி, சிறுகுடி, கோட்டையூர், பட்டணம்பட்டி பகுதிகளுக்கு டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இப்பகுதியை சேர்ந்தவர்கள் பெரும்பாலோர் ஏழ்மையில் உள்ளதால் பஸ் போக்குவரத்தையே நம்பியுள்ளனர்.
டவுன் பஸ்கள் தவிர திண்டுக்கல், காரைக்குடி, பழனி, திருப்பூர் உள்ளிட்ட வெளியூர் செல்லும் அரசு பஸ்களும் நத்தம் வழியாக அதிகம் வந்து செல்கின்றன. வெளியூர் மற்றும் டவுன் பஸ்கள் பலவற்றில் மேற்கூரைகள் துருப்பிடித்து சேதமடைந்துள்ளன. மழை நேரங்களில் பஸ் உட்புறம் மழைநீர் ஒழுகுவதால் இருக்கைகள் அனைத்தும் நனைந்து, பயணிகள் அவதிப்படுகின்றனர்.
பயணிகள் நின்று கொண்டு கூட செல்ல முடியாத சூழல் உருவாகிறது.
நேற்று காலை நத்தத்தில் இருந்து அலங்காநல்லுார் சென்ற டவுன் பஸ் ஸ்டார்ட் ஆகவில்லை.
இதையடுத்து பயணிகள் மற்றும் போக்குவரத்து ஊழியர்கள் பஸ்சை முன்னும், பின்னும் தள்ளி 'ஸ்டார்ட்' செய்தனர். இதனால் தாமதமாக பஸ் புறப்பட்டு சென்றது. இது வாடிக்கையாக நடப்பதாகவும், சில பஸ்கள் பாதிவழியில் பழுதாகி நின்று விடுவதாகவும் பயணிகள் புகார் கூறுகின்றனர். எனவே பயணிகளின் சிரமத்தை கருத்தில் கொண்டு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.