புதுச்சேரி: தம்பியின் திருமணத்திற்காக தாய் வீட்டிற்கு வந்த இளம் பெண், இரு குழந்தைகளை தவிக்கவிட்டுவிட்டு, ரூ.20 லட்சம் பணம் மற்றும் 30 சவரன் நகைகளுடன் மாயமானார்.புதுச்சேரி, முதலியார்பேட்டை, வேல்ராம்பட்டு, அங்கம்மாள் சத்திரம் பகுதியை சேர்ந்தவர் இளங்கோ, 54. கட்டட கான்ட்ராக்டர். இவரது மனைவி உமா. இவர்களுக்கு, வித்யா என்ற மகளும், விக்னேஷ் என்ற மகன் உள்ளனர்.மூத்த மகள் வித்யாவை ஐந்தாண்டிற்கு முன், புதுச்சேரி தர்மாபுரியைச் சேர்ந்த சம்பத் என்பவருக்கு திருமணம் செய்து வைத்தனர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.இந்நிலையில் இளங்கோ, தனது மகன் விக்னேஷிற்கு திருமண ஏற்பாடு செய்து வந்தார். தம்பியின் திருமண ஏற்பாடுகளை கவனிப்பதற்காக வித்யா, தனது இரு குழந்தைகளுடன் சில தினங்களுக்கு முன் தாய் வீட்டிற்கு வந்தார். கடந்த 7ம் தேதி காலை, குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு, வீட்டிலிருந்து வெளியில் சென்ற வித்யா மீண்டும் வீடு திரும்பவில்லை. வீட்டை ஆய்வு செய்த போது, திருமணத்திற்காக பீரோவில் வைத்திருந்த 30 சவரன் நகை, ரூ.20 லட்சம் பணத்துடன் வித்யா மாயமாகியது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து பல்வேறு இடங்களில் தேடியும் வித்யாவை கண்டுபிடிக்க முடியவில்லை.இதுகுறித்து அவரது தந்தை இளங்கோ கொடுத்த புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, பணம் மற்றும் நகைகளுடன் மாயமான வித்யாவை தேடி வருகின்றனர்.