சென்னை:சென்னையில், பெண்களுக்கான பிரத்யேக வசதியுடன் கூடிய, இ - கழிப்பறைகள், 84 இடங்களில் அமைக்க, மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
'நிர்பயா' நிதியின் கீழ், பாதுகாப்பான நகரங்கள் திட்டத்தை செயல்படுத்த, டில்லி, மும்பை, சென்னை, பெங்களூரு உள்ளிட்ட எட்டு நகரங்களை, மத்திய அரசு தேர்ந்தெடுத்தது. அதன்படி, சென்னை பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, 425.06 கோடி ரூபாய் மதிப்பில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு, மத்திய அரசு, 255.03 கோடி ரூபாய்; மாநில அரசு, 170.03 கோடி ரூபாய் வழங்கி, 2021க்குள் திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டு உள்ளது.அதன்படி, சென்னையில் உள்ள பேருந்துகளில், 'சிசிடிவி' கேமரா பொருத்துவது, பாதுகாப்பற்ற இடங்களில், 'ஸ்மார்ட் கம்பங்கள்' அமைப்பது, பெண்களுக்கான இ - கழிப்பறை, மொபைல் கழிப்பறைகள், பெண்கள் பாதுகாப்பு படை மற்றும் இணையதளம் வாயிலாக கண்காணிக்கப்படும் தெரு விளக்குகள், அவசரகால தொலைபேசி மற்றும் மொபைல் ஆப் உள்ளிட்ட வசதிகள் நடைமுறைப்படுத்தப்பட உள்ளன.இதில், 'அம்மா' ரோந்து வாகனம் என்ற பெயரில், பெண்களுக்கான சிறப்பு காவல்படை, சென்னை போலீசாரால் துவங்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளது.இதையடுத்து, சென்னையில், 84 இடங்களில், இ - கழிப்பறைகள் அமைக்க, சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:நிர்பயா நிதியில், சென்னையில், 84 இடங்களில், 150 இருக்கைகள் கொண்ட, இ - கழிப்பறை அமைக்கப்பட உள்ளது. பெண்களுக்காக மட்டுமே, சிறப்பு அம்சங்களுடன் கழிப்பறைகள் அமைக்கப்படும். இதில், கதவுகளில் அலாரம் வசதி, சென்சார் மற்றும் தானியங்கி சானிட்டரி நாப்கின் வழங்கும் இயந்திரங்கள் அமைக்கப்பட உள்ளன.அதிகபட்சமாக, கோடம்பாக்கம் மண்டலத்தில், 48, சோழிங்கநல்லுார் மண்டலத்தில், 30 இடங்களில் அமைக்கப்பட உள்ளன.இவ்வாறு அவர்கள் கூறினர்.