கோயம்பேடு:குடும்ப பிரச்னையில், கணவன் தற்கொலை செய்ததால், அந்த சோகத்தில், மனைவியும் தற்கொலை செய்து கொண்டார்.
பெற்றோரை இழந்து, அவர்களது இரு பெண் குழந்தைகளும் அனாதையாக நிற்பதால், அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.கோயம்பேடு, ஆழ்வார் திருநகர், பெரியார் நகரைச் சேர்ந்தவர் சண்முகம், 36; ஆட்டோ ஓட்டுனர். இவரது மனைவி ராஜேஸ்வரி, 32. இவர்களுக்கு, கனிமொழி, 9, லித்திகா, 6, என, இரண்டு மகள்கள் உள்ளனர்.குடும்ப பிரச்னை காரணமாக, சண்முகம் சமீபத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்தார். நேற்று முன்தினம், சண்முகம் இறப்புக்காக, துக்கம் அனுசரிப்பு நிகழ்வு நடைபெற்றது.
சண்முகம் இறந்ததில் இருந்தே, ராஜேஸ்வரி பெரும் சோகத்துடன் காணப்பட்டார். நேற்று முன்தினம் இரவு, வீட்டில் ராஜேஸ்வரி மற்றும் அவரது இரண்டு மகள்கள் மட்டும் தனியாக இருந்தனர். நேற்று காலை, இரண்டு மகள்களும் எழுந்து பார்த்த போது, ராஜேஸ்வரி துாக்கிட்டு தற்கொலை செய்தது தெரிய வந்தது.கோயம்பேடு போலீசார், அவரது உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பெற்றோரை இழந்து, இரு பெண் குழந்தைகள் அனாதையாக நிற்பது, அப்பகுதியினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.