பம்மல்:அடையாறு ஆற்றில் ஆக்கிரமிப்புக்களை அகற்றிக் கொண்டிருந்த பொதுப்பணித் துறை அதிகாரிகள், 'உள்ளாட்சி தேர்தலால், தற்போதைக்கு எந்த வீட்டையும் இடிக்க வேண்டாம்' என, மாவட்ட நிர்வாகத்திடம் இருந்து உத்தரவு வந்ததால், பணியை பாதியில் நிறுத்தினர்.
கடந்த, 2015 வெள்ள பாதிப்பை அடுத்து, சென்னை புறநகர் பகுதி யில், அடையாற்றை ஒட்டியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற, காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டது.அதன்படி, மண்ணிவாக்கம், முடிச்சூர் பகுதிகளில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. தொடர்ந்து, பொழிச்சலுார், அனகாபுத்துார் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை எடுக்க முடிவு செய்யப்பட்டது.அனகாபுத்துாரில், சில கட்டடங்கள் இடிக்கப்பட்டன. ஆக்கிரமிப்பாளர்கள் நீதிமன்றத்திற்கு சென்றதால், அப்படியே விட்டனர். பொழிச்சலுார், விநாயகா நகரில், 46 கட்டடங்களை அகற்ற, பல முறை, 'நோட்டீஸ்' கொடுக்கப்பட்டுள்ளது.கடந்த, 2018 செப்டம்பரில், போலீஸ் பாதுகாப்புடன், இரண்டு ஆக்கிரமிப்புகளை அகற்றினர். சில காரணங்களால், அதை அப்படியே விட்டனர். நேற்று காலை, மீண்டும் ஆக்கிரமிப்புகளை அகற்ற, போலீஸ் பாதுகாப்புடன், பொதுப்பணித் துறை அதிகாரிகள் வந்தனர். ஆற்றை ஒட்டியுள்ள, ஒரு கட்டடத்தை இடித்தனர்.
அதற்குள், மேலிடத்தில் இருந்து பணியை நிறுத்த உத்தரவு வந்ததால், பணியை அப்படியே நிறுத்தி, அதிகாரிகள் அங்கிருந்து சென்றனர்.உள்ளாட்சி தேர்தலை கருத்தில் கொண்டு, ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை நிறுத்தி வைக்குமாறு, மாவட்ட நிர்வாகத்திடம் இருந்து உத்தரவு வந்ததாகவும், அதனால், பணியை நிறுத்தியதாகவும், பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.