சென்னை:தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின், பெசன்ட் நகர் கிளையின், வெள்ளி விழா கொண்டாட்டம் நேற்று துவங்கியது.
பதிவு செய்யப்பட்ட தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் கிளை, பெசன்ட் நகரில் இயங்கி வருகிறது. அதன் சார்பில், பல ஆண்டுகளாக, ஏராளமான சமூக சேவையாற்றப்பட்டு வருகிறது. இக்கிளை துவக்கப்பட்டு, 25 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளன.அதன், இரண்டு நாள் வெள்ளி விழா கொண்டாட்டம், பெசன்ட் நகர், கலாஷேத்ரா காலனி, அருண் டேல் கடற்கரை சாலையில் உள்ள, ரமணியம் மகாலட்சுமி அரங்கில், நேற்று துவங்கியது.முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, கண்காட்சியை திறந்து வைத்து, வெள்ளி விழா மலரை வெளியிட்டார்.நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:விமலா பவுண்டேஷன் சார்பில், 7 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டு, அந்த வருவாயில், தமிழ்நாடு பிராமணர் சங்கம் சமூக சேவையாற்றி வருகிறது.நானும் ஒரு, 'டிரஸ்ட்' உருவாக்கி, சேவையாற்றி வருகிறேன். நம் சேவை, அனைத்து தரப்பினரையும் சென்றடைய வேண்டும். பிராமணர் சமூகத்தைச் சேர்ந்த பலர், மிகவும் வறுமையில் உள்ளனர்.கடவுள் நமக்கு கொடுத்ததை, பகிர்ந்து கொள்ள வேண்டும். செய்யும் தர்மத்திற்கு விளம்பரம் கூடாது. நம் கலாசாரத்தை ஒருபோதும் விட்டுக் கொடுக்கக் கூடாது; அதே நேரம், மற்றவர்களின் கலாசாரத்தையும் மதிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.
விழா மலரின் முதல் பிரதியை பெற்ற, பிராமணர் சங்க மாநில தலைவர் பம்மல் ராமகிருஷ்ணன் பேசியதாவது:பிராமணர் சங்கம், 40வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இச்சங்கத்தால், எப்போதும் வன்முறை ஏற்பட்டதில்லை. தற்போது, நம் தேவைக்காக, வீதியில் போராட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.முற்பட்ட சமூகத்தினர்களுக்கான, 10 சதவீத இட ஒதுக்கீடை மத்திய அரசு அறிவித்தாலும், மாநில அரசு செயல்படுத்தவில்லை. அதை செயல்படுத்த, முயற்சி மேற்கொண்டு வருகிறோம்.இவ்வாறு, அவர் பேசினார்.
ஆன்மிக பேச்சாளர் ஆர்.பி.வி.எஸ்.மணியன் சொற்பொழிவாற்றினார். பிராமணர் சங்க பெசன்ட் நகர் கிளை தலைவர் ஜெயராமன், விருந்தினர்களை கவுரவித்தார். சங்க ஆலோசகர் ஜம்புநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இரண்டாம் நாள் விழாவான இன்று, முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் எச்.வி.ஹண்டே சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.