காசிமேடு: தண்டையார்பேட்டை, ஒத்தவாடை பகுதியைச் சேர்ந்தவர் வசந்த், 21. இவர் மீது, வழிப்பறி, கொலை முயற்சி வழக்குகள் உள்ளன. அக்., 27ம் தேதி, திருப்பதி என்பவரை வெட்டிய வழக்கில் தலைமறைவாக இருந்தார். காசிமேடு போலீசார், நேற்று அவரை கைது செய்தனர்.
கஞ்சா கடத்திய இருவருக்கு, 'காப்பு'
பூந்தமல்லி: பூந்தமல்லி போலீசார், நேற்று முன்தினம், காட்டுப்பாக்கம், செந்துார்புரம் பகுதியில், வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, அவ்வழியாக வந்த ஒரு இருசக்கர வாகனத்தை சோதனையிட்டனர். அதில், கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது. காட்டுப்பாக்கத்தை சேர்ந்த காமராஜ், 39, டி.பி.சத்திரத்தைச் சேர்ந்த மணிகண்டன், 41, ஆகிய இருவரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து, 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
22 சவரன் நகை திருட்டு
ஐஸ்ஹவுஸ்: திருவல்லிக்கேணி, சுந்தரமூர்த்தி விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஸ்ரீதரன், 72; ஓய்வு பெற்ற ரயில்வே அதிகாரி. நேற்று முன்தினம் காலை, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில், ஒரு நாள் சுற்றுலாவாக, மனைவி மகேஸ்வரியுடன், திருப்பதி சென்றார். இரவு வீடு திரும்பிய போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்து, 22 சவரன் நகை, 40 ஆயிரம் ரூபாய் திருடு போனது தெரியவந்தது. ஐஸ்ஹவுஸ் போலீசார் விசாரிக்கின்றனர்.
தொழிலாளியை வெட்டிய இருவர் கைது
கோயம்பேடு: கடலுார் மாவட்டம், நல்லுார் கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யப்பன், 26; கோயம்பேடு மார்க்கெட்டில் கூலி வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு, பூ மார்க்கெட்டில் நின்று கொண்டிருந்த போது, அங்கு வந்த இருவர், அய்யப்பனை கிண்டல் செய்தனர். தட்டிக் கேட்டபோது, இருவரும், மறைத்து வைத்திருந்த கத்தியால் அய்யப்பனை வெட்டினர். அவர், கீழ்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்தவர்கள், இரண்டு நபர்களையும் பிடித்து, கோயம்பேடு போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்கள், கோயம்பேடைச் சேர்ந்த மணிகண்டன், 22, புளியந்தோப்பைச் சேர்ந்த அருணாசலம், 22 என, தெரியவந்தது. இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
வீடு புகுந்து திருடியோருக்கு, 'கம்பி'
தேனாம்பேட்டை: வடமாநிலத்தைச் சேர்ந்தவர் பப்பு சிங், 24. தேனாம்பேட்டை, திருவள்ளுவர் சாலையில் தங்கி, தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு, அவரது அறையில் புகுந்த, நான்கு மர்ம நபர்கள், கத்தியை காட்டி மிரட்டி, 9,000 ரூபாய், இரண்டு மொபைல் போன்கள் ஆகியவற்றை பறித்துச் சென்றனர். தேனாம்பேட்டை போலீசார் விசாரித்தனர். கண்காணிப்பு கேமரா பதிவில், திருட்டில் ஈடுபட்ட, தேனாம்பேட்டை, பருவா நகரைச் சேர்ந்த கோபி, 19, ஆழ்வார்பேட்டையைச் சேர்ந்த, 17 வயது சிறுவன் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து, 2,000 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. தலைமறைவாக உள்ள, அவர்களது கூட்டாளிகள் மணி, அஜித் ஆகியோரை தேடி வருகின்றனர்.
பணம் பறித்தவர் அகப்பட்டார்
திருவொற்றியூர்: திருவாரூரைச் சேர்ந்தவர் ராஜேஷ், 31; கன்டெய்னர் ஓட்டுனர். நேற்று அதிகாலை, மணலிபுதுநகர் - ஈச்சங்குழியில் இருந்து, சென்னை துறைமுகம் நோக்கி, கன்டெய்னர் லாரி ஓட்டிச் சென்றார். எண்ணுார் விரைவு சாலை, அப்பர் சாமி கோவில் தெரு அருகே, லாரியை வரிசையில் போட்டு, படுத்து உறங்கினார். அப்போது, அங்கு வந்த மர்ம நபர்கள் மூவர், கத்தியை காட்டி மிரட்டி, ராஜேஷிடம் இருந்து, பணம், மொபைல் போன் உள்ளிட்டவற்றை பறித்தனர். பயத்தில் அலறினார். அப்போது, ரோந்து போலீசார், அவ்வழியே சென்றதும், இருவர் தப்பினர். பிடிபட்ட, திருவொற்றியூரைச் சேர்ந்த அங்கப்பன், 25, என்பவரை, திருவொற்றியூர் போலீசார் கைது செய்து, கத்தியை பறிமுதல் செய்தனர். தப்பிய இருவரை தேடி வருகின்றனர்.
கஞ்சா வியாபாரிகள் சுற்றிவளைப்பு
செம்மஞ்சேரி: செம்மஞ்சேரி, சுனாமி குடியிருப்பைச் சேர்ந்தோர் சிவா, 23, அஜித், 20, கார்த்திக், 24. மூன்று பேரும் சேர்ந்து, சுனாமி குடியிருப்பில் கஞ்சா வியாபாரம் செய்தனர். செம்மஞ்சேரி போலீசார், நேற்று, மூன்று பேரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து, 1.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
சான்றிதழ் அடகு வைத்து பணம் மோசடி
வடபழநி: நங்கநல்லூரைச் சேர்ந்தவர் ஸ்ரீவித்யா, 29; வடபழனி, கங்கையம்மன் கோவில் தெருவில், பங்கஜவல்லி என்பவரின் வேலை வாய்ப்பு அலுவலகத்தில், பணிக்கு சேர்ந்தார். ஸ்ரீவித்யாவின் கல்லுாரி சான்றிதழ்களை, வங்கியில் அடகு வைத்து கடன் வாங்கி தருவதாக, பங்கஜவல்லி கூறி உள்ளார். அதன்படி, 4 லட்சம் ரூபாய் கடன் பெற்று மோசடி செய்துள்ளார்.
வடபழனி போலீசார் விசாரிக்கின்றனர்.