உடுமலை:அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு உளவியல் பயிற்சித்திட்டம் குறித்த அறிவிப்பை, விரைவில் செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.அரசுப்பள்ளி மாணவர்கள், குடும்ப சூழல், பொருளாதார வசதியின்மை போன்ற பல்வேறு காரணங்களால் மாணவர்கள் மனதளவில் பாதிக்கப்படுகின்றனர். இதனால், மாணவர்களுக்கு, உளவியல் ரீதியான பிரச்னைகளுக்கு ஆலோசனை வழங்க, நடமாடும் ஆலோசனை மையத்திட்டத்தை அரசு செயல்படுத்தியுள்ளது.அதுபோல், ஆசிரியர்களுக்கும் மாணவர்களை கையாள்வது மற்றும் கற்பித்தல், பள்ளிச்சூழலில் ஏற்படும் மன ரீதியான பாதிப்புகளுக்கு, ஆலோசனை வழங்க வேண்டுமென, ஆசிரியர் சங்கங்களின் சார்பில் தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டது.இதையொட்டி, ஆசிரியர்களுக்கும் உளவியல் ரீதியான பயிற்சி வழங்கப்படும் என, கடந்த ஆண்டு அரசு அறிவித்தது. ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் மூலம் ஆசிரியர்களுக்கான பயிற்சி வழங்குவதிலும் மாற்றம் கொண்டுவரப்பட்டது.திட்டத்தில் ஆசிரியர்களுக்கு, உளவியல் நிபுணர்கள் மற்றும் ஆலோசகர்கள் மூலம், உளவியல் ஆலோசனைகள் வழங்கும் பயிற்சி அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.ஆனால், இதுவரை வழக்கமான, பாடம் தொடர்பான பயிற்சி மட்டுமே வழங்கப்படுகிறது. உளவியல் பயிற்சி அளிப்பது குறித்து அறிவிப்புக்கு பின்னர், அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என, ஆசிரியர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.தலைமையாசிரியர் ஒருவர் கூறுகையில்,'' மாணவர்களுக்கு இருப்பதுபோல், ஆசிரியர்களும், பல்வேறு உளவியல் பிரச்னைகளை பள்ளிகளில் சந்திக்கின்றனர். இதற்கான தீர்வாக, இந்த பயிற்சி வகுப்புகள் இருக்கும் என எதிர்பார்த்தோம். அறிவிப்போடு, அடுத்தகட்டமாக, பயிற்சி குறித்து எந்த நடவடிக்கையும் இல்லை. இதனால், ஆசிரியர்களும் நம்பிக்கை இழந்து வருகின்றனர். பயிற்சி வழங்கும் நடவடிக்கைகளை செயல்படுத்தினால், ஆசிரியர்களுக்கு மாணவர்களை தேர்வுகளுக்கு வழிநடத்தவும், மன அழுத்தம் இல்லாமல் பணிசெய்யவும் பயனுள்ளதாக இருக்கும்,'' என்றார்.