புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில், வாழைத்தார் விலை கடும் வீழ்ச்சிஅடைந்துள்ளதால், அறுவடை செய்யாமல், மரங்களிலேயே வாழைத்தார் பழுக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குடி, கறம்பக்குடி தாலுகா உட்பட பல்வேறு பகுதிகளில், அதிக அளவில், வாழை சாகுபடி செய்யப்படுகிறது.
வர்த்தகம்: இப்பகுதியில் விளையும் வாழைத்தார் புதுக்கோட்டை, ஆவணம் கைகாட்டி, கீரமங்கலம் ஆகிய பகுதிகளில் உள்ள, 'கமிஷன் ஏஜென்டு'களால் கொள்முதல் செய்யப்பட்டு, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகிறது.மேலும், வியாபாரிகள் நேரடியாக வந்து, வாழை விவசாயிகளிடம் விலை நிர்ணயம் செய்து வாங்கிச் சென்றனர். இதனால், ஆண்டுதோறும், கோடி கணக்கான ரூபாய் வாழை வர்த்தகம் நடைபெறும். சில மாதங்களுக்கு முன், 1 கிலோ, 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட வாழைத்தார், தற்போது, 4 ரூபாய்க்கு மட்டுமே விற்பனையாகிறது.
இழப்பு: மேலும், வாழைதார் வாங்குவதற்கு வியாபாரிகள் வருவதில்லை. இதனால், மரங்களிலேயே, வாழைத்தார்கள் பழமாகி, பின் வீணாகின்றன. இதனால், விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.