பெரம்பலுார் ; அரியலுார் அருகே, மின்வாரிய உதவி மின்பொறியாளர் மனைவியின் சாவில், மர்ம இருப்பதாகக்கூறி, அவரது உறவினர்கள் வீட்டை சூறையாடியதால், போலீசார் குவிக்கப்பட்டனர்.
அரியலுார் மாவட்டம், மருவத்துார் கிராமத்தை சேர்ந்தவர் ராதா மகன் பிரபாகரன்,28, பி.இ., பட்டதாரியான இவர், தமிழ்நாடு மின்வாரியத்தில், பெரம்பலுார் மாவட்டத்தில், உதவி மின்பொறியாளராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், பொன்குடிக்காடு கிராமத்தை சேர்ந்த ஊமதுரை மகள் கார்த்திகா,25, என்பவருக்கும், கடந்த, 2018ம் ஆண்டு பிப்., 8ம் தேதி திருமணம் நடந்தது. தம்பதிகளுக்கு இதுவரை குழந்தை இல்லை.
தம்பதிகளிடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. பொன்பரப்பி கிராமத்தில் கார்த்திகாவின் உறவினர் திருமண நிகழ்ச்சிக்கு தம்பதிகள் இருவரும் சென்றுவிட்டு நேற்று இரவு வீடு திரும்பினர். இந்நிலையில், கார்த்திகா துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக, இன்று காலை 8:00 மணியளவில், பிரபாகரன் கார்த்திகாவின் உறவினர்களுக்கு போனில் தகவல் தெரிவித்தார்.
இதனால், ஆத்திரமடைந்த கார்த்திகாவின் உறவினர்கள் அங்கு சென்று, சாவில் மர்ம இருப்பதாகக்கூறி, பிரபாகரனை அடித்து உதைத்ததுடன், பிரபாகரனின் வீட்டை அடித்து நொறுக்கி, சூறையாடினர்.
இத்தகவலறிந்து, அங்கு வந்த செந்துறை போலீசார் அவர்களை சமாதானம் செய்து, பிரபாகரனை மீட்டு போலீஸ் ஸ்டேஷன் அழைத்து சென்றனர்.
பின்னர், கார்த்திகாவின் உடலை பொன்குடிக்காடு எடுத்து செல்வதாக கூறி, அவரது உறவினர்கள் லோடு ஆட்டோவில் ஏற்றினர். போலீசார் இதை தடுத்து, உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, அரியலுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால், கார்த்திகாவின் உறவினர்களுக்கும், போலீசாருக்கும் இடையே சிறிது நேரம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இது குறித்து, கார்த்திகாவின் அப்பா ஊமதுரை கொடுத்த புகாரின்பேரில், செந்துறை இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் வழக்கு பதிந்து, பிரபாகரனிடம் விசாரிக்கிறார். உறவினர்களிடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து, அரியலுார் டி.எஸ்.பி., திருமேனி தலைமையில் மருவத்துார் கிராமத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு, தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
திருமணமாகி ஒன்றரை ஆண்டுகளே ஆவதால், கார்த்திகாவின் சாவுக்கு வரதட்சணை கொடுமை காரணமா என உடையார்பாளையம் ஆர்.டி.ஓ., பூங்கோதை விசாரிக்கிறார்.