மேட்டுப்பாளையம்:சிவன்புரத்தில் சாக்கடை கால்வாய் அமைக்காததால், கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்பதால், டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது என, பொது மக்கள், உள்ளாட்சி அமைச்சரிடம் புகார் செய்துள்ளனர்.காரமடை பேரூராட்சிக்கு உட்பட்ட சிவன்புரம் சுண்ணாம்பு கால்வாய் சாலை முதல் மற்றும் 2வது வீதியில், 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த வீதிகளில் சாக்கடை கால்வாய் கட்டக்கோரி, இப்பகுதி பொது மக்கள் பேரூராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் நிர்வாகம் சாக்கடை வாய்க்கால் அமைக்காமல் காலம் கடத்தி வந்தது.இந்நிலையில் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலைகளில் தேங்கி நிற்கிறது. இதிலிருந்து உற்பத்தியாகும் கொசுக்கள் கடிப்பதால், இப்பகுதியில் உள்ள மக்கள் அடிக்கடி காய்ச்சலால் அவதிப்படுகின்றனர்.மேலும், டெங்கு காய்ச்சல் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே, பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக சாக்கடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காரமடை வந்த தமிழக உள்ளாட்சி அமைச்சர் வேலுமணியிடம், சிவன்புரம் பகுதி பொது மக்கள் கொடுத்த புகார மனுவில் கூறியுள்ளனர்.