திருப்பூர்:திருப்பூர், தென்னம்பாளையம் உழவர்சந்தை வளாகத்தில், தோட்டக்கலைத்துறை பண்ணைகளில் விளையும் உணவுப்பொருட்களை சந்தைப்படுத்துவதற்கான விற்பனை மையம் துவக்கப்பட்டுள்ளது.தோட்டக்கலைத்துறை பண்ணைகளில் பழங்கள், காய்கறிகள், பூக்கள், நறுமணப் பொருட்கள், மலைப்பயிர்கள் உள்ளிட்டவை விளைவிக்கப்படுகின்றன.தவிர, பதப்படுத்தப்பட்ட பொருட்களான ஜாம், ஜெல்லி, ஊறுகாய் உள்ளிட்டவையும் தயாரிக்கப்படுகின்றன. இவற்றை சந்தைப்படுத்தவும், விற்பனையை அதிகரிக்கச் செய்யவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.அதன் ஒரு பகுதியாக, திருப்பூர் தென்னம்பாளையம் உழவர்சந்தை வளாகத்தில், 'டான்ேஹாடா' பெயரில் புதிய விற்பனை நிலையம் துவக்கப்பட்டுள்ளது.இதனை கலெக்டர் விஜயகார்த்திகேயன், நேற்றுமுன்தினம் துவக்கி வைத்தார். இங்கு, ஜாதிக்காய், லோகுவாட், ஜெல்லி, ஜாதிக்காய் ஊறுகாய், பேஷன் புரூட் ஸ்குவாஷ், பைனாபிள் ஸ்குவாஷ், கிரேப் ஸ்குவாஷ் போன்ற பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள், நறுமணப் பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.துவக்க விழாவில், தோட்டக்கலைத்துறை சார்பில், 2.25 லட்சம் மதிப்பில், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் சுகந்தி, உதவி இயக்குனர்கள் (பொறுப்பு) சுரேஷ்குமார், செல்வகுமார், தாசில்தார் மகேஸ்வரன் உட்பட பலர் பங்கேற்றனர்.