திருப்பூர்:'சொந்த பயன்பாட்டுக்கான கார்களை வாடகைக்கு இயக்கினால், உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். 15 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்,' என ஆர்.டி.ஓ.,க்கள் எச்சரித்துள்ளனர்.
சொந்த பயன்பாட்டுக்கு வாங்கிய கார்களை உறவினர், நண்பர் அழைக்கும் போது அல்லது வேறுநபருக்கு சுற்றுலா என்ற பெயரில் வாடகைக்கு இயக்குகின்றனர்.இதனால், வாடகை கார் ஓட்டிகள் வேலையிழப்பு, அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.இது குறித்து தொடர்ந்து புகார்கள் வந்த நிலையில், நீண்ட இடைவெளிக்கு பிறகு வட்டார போக்குவரத்து துறையினர் விதிமுறை மீறும் வாகனங்கள் குறித்து ஆய்வு செய்ய துவங்கியுள்ளனர்.இந்நிலையில் திருப்பூர் ஈஸ்வரன் கோவில் வளாகத்தில் ஆர்.டி.ஓ., அலுவலகம் சார்பில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பில், 'ஐயப்ப பக்தர்கள் கவனத்துக்கு, சபரிமலை செல்லும் பக்தர்கள் பயணத்துக்கு சொந்த வாகனங்களை வாடகைக்கு எடுத்துச் சென்றால், மோட்டார் வாகன சட்டம், 1088 பிரிவு, 192 (ஏ) படி குற்றமாகும்.விதிமீறும் வாகன ஓட்டிகளுக்கு, 15 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும்,' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு ஆர்.டி.ஓ., முருகானந்தம் கூறுகையில்,' சொந்த பயன்பாட்டு வாகனங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. அவ்வப்போது எச்சரிக்கை விடுக்கிறோம். விதிமுறை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றார்.வடக்கு ஆர்.டி.ஓ., குமார் கூறுகையில்,'தீபாவளி, சபரிமலை சீசனை ஒட்டி சொந்த பயன்பாட்டு வாகனங்களை வாடகைக்கு பலரும் இயக்குவதாக புகார் வந்துள்ளது.அதன் பேரில் சோதனை நடத்தி வருகிறோம். விதிமீறுவோருக்கு அபராதம் விதிக்கப்படும்,' என்றார்.