உடுமலை:உடுமலை அருகே பயன்பாடில்லாத அரசு கட்டடம், சமூக விரோதிகள் கூடாரமாக மாறியுள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.உடுமலை ஒன்றியம் பூலாங்கிணறு ஊராட்சிக்குட்பட்ட முக்கோணத்தில், கால்நடைத்துறையின் கால்நடை மருந்தகம் செயல்பட்டு வந்தது.இம்மருந்தகத்தில், பூலாங்கிணறு, முக்கோணம், கிருஷ்ணாபுரம் உட்பட சுற்றுப்பகுதியை சேர்ந்த கால்நடைகளுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. போதிய பராமரிப்பு இல்லாததால், மருந்தக கட்டடத்தின் மேற்கூரை மற்றும் சுவர்கள் விரிசல் விட்டு, கட்டடம் பயன்படுத்த முடியாத நிலைக்கு மாறியது. இதையடுத்து, கால்நடைத்துறைக்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில், மாற்று இடம் வழங்கப்பட்டு, புதிய கட்டடம் கட்டப்பட்டது. புதிய கட்டடத்திற்கு கால்நடை மருந்தகம் மாற்றப்பட்டதால், பழைய கட்டடம் யாருக்கும் பயனில்லாமல், வீணாக விடப்பட்டது. தற்போது, இக்கட்டடம் சமூக விரோதிகள் கூடாரமாக மாறி வருகிறது. தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி, அமைந்துள்ள கட்டடத்தில், பகல் நேரங்களிலேயே 'குடி'மகன்'கள் தஞ்சமடைந்து வருகின்றனர். இரவு நேரங்களிலும் இதே பிரச்னை உள்ளது.பழைய கட்டடத்தின் அருகே, பூலாங்கிணறு ஊராட்சி அலுவலகம், அங்கன்வாடி மையம், கோவில் மற்றும் நுாற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. பாழடைந்து வரும் கட்டடம் மற்றும் புதர் மண்டி கிடக்கும் வளாகத்தால், அவ்வழியாக செல்வோரும், அருகிலுள்ள குடியிருப்பு மக்களும் அச்சத்தில் உள்ளனர். கட்டடத்தை பராமரித்து மாற்று பயன்பாட்டுக்கு ஒப்படைக்க வேண்டும்.