திருமுல்லைவாயல் : ஆவடி அருகே தண்டவாளத்தை கடந்த போது, ரயிலில் சிக்க இருந்த காவலரை, ஊர்க்காவல் படை வீரர் காப்பாற்றினார்.
ஆவடி, வீராபுரத்தைச் சேர்ந்தவர், சவுந்தரராஜன், 46; திருமுல்லைவாயல் தலைமை காவலர். அண்ணனுார், சிவசக்தி நகரைச் சேர்ந்த சாய்ராம், 49, என்பவரது வீட்டில் திருடிய நபர் குறித்து, நேற்று காலை, போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
காவலர் சவுந்தரராஜன், குற்றவாளியை பிடிக்க, இருசக்கர வாகனத்தில் சென்றார். அவருடன், ஊர்க்காவல் படை காவலர் கிருபாகரன் சென்றார்.அண்ணனுார் ரயில் நிலையம் அருகே, ரயில்வே கேட்டை கடக்க முயன்ற போது, திடீரென இருசக்கர வாகனம் நின்றது.
அப்போது, சென்னை நோக்கி, திருவனந்தபுரம் விரைவு ரயில் வேகமாக வந்தது. சவுந்தரராஜன் செய்வதறியாது திணறிய நிலையில், கிருபாகரன் துரிதமாக செயல்பட்டு, அவரை இழுத்து காப்பாற்றினார்.இதில், சவுந்தரராஜனுக்கு காயம் ஏற்பட்டது. ரயிலில் சிக்கிய இருசக்கர வாகனம் சுக்குநுாறானது. ஆவடி ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.