சபரிமலை:சபரிமலை அய்யப்பன் கோவிலில், சாமி தரிசனம் செய்ய, தனது தந்தையுடன் வந்த, 12 வயதான புதுச்சேரி சிறுமியை, போலீசார் பம்பையில் தடுத்து நிறுத்தினர்.
சீராய்வு மனுக்கள்
கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்கு, பத்தணம் திட்டா மாவட்டத்தில் உள்ள, சபரிமலை கோவில் விவகாரத்தில் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்களை, ஏழு பேர் அடங்கிய அமர்வுக்கு மாற்றி, உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. இதையடுத்து, '10 முதல் 50 வயது வரையிலான பெண்களை, சபரிமலை கோவிலுக்குள் அனுமதிக்க மாட்டோம்' என, மாநில அரசு அறிவித்தது. மீறி நுழைய முயலும் இளம் பெண்களை, தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பும் பணியில், போலீசார் ஈடுபட்டுள்ளனர். சோதனைஇந்நிலையில், புதுச்சேரியை சேர்ந்த சிறுமி, தனது தந்தையுடன் சாமி தரிசனம் செய்ய, நேற்று வந்தார். பம்பையில் இருந்து சன்னிதானம் நோக்கி புறப்பட்டவர்களை, போலீசார் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர்.அந்த சிறுமியிடம் இருந்த தரிசன 'டிக்கெட்'டில், அவரது வயது, 10 என குறிப்பிடப்பட்டு இருந்தது. அவரது அடையாள அட்டையில், 12 என இருந்தது. இதையடுத்து, அந்த சிறுமியை அனுமதிக்க போலீசார் மறுத்தனர். அவரது தந்தை சாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பும் வரை, சிறுமியை பாதுகாப்பாக தங்க வைக்க, போலீசார் ஏற்பாடு செய்தனர்.
இதையடுத்து, அந்த சிறுமி, அழுதபடி பம்பையிலேயே தங்கவைக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து போலீசாரிடம் கேட்டபோது, 'அப்படியொரு சம்பவமே நடக்கவில்லை' என, மறுத்தனர். சிறுமியின் அடையாள அட்டையை போலீசார் சோதனையிடுவதும், சிறுமி அழுது கொண்டிருக்கும், 'வீடியோ' சமூகவலைதளங்களில் வெளியானதை அடுத்து, இந்த தகவல் வேகமாக பரவியது.18 ஆண்டுகளுக்கு பின் மண்டல சீசனில் படி பூஜைசபரிமலையில் முக்கிய பூஜைகளில் ஒன்று படி பூஜை. இதற்கு கட்டணம், 75 ஆயிரம் ரூபாய். 18 படிகளிலும் பட்டு விரித்து, தேங்காய், பழம், பூ வைத்து குத்து விளக்கேற்றி ஒரு மணி நேரம் இந்த பூஜை நடக்கும். படியை சுத்தம் செய்து தயார் செய்ய அரை மணி நேரம் ஆகும். இந்த நேரத்தில் பக்தர்கள் படியேற முடியாது.மண்டல, மகரவிளக்கு காலத்தில் அதிகமான பக்தர்கள் வரும் போது படியேறுவது நிறுத்தப்பட்டால், நெரிசல் ஏற்படும்.
இதனால், இந்த சீசனில் படிபூஜை, 18 ஆண்டுகளுக்கு முன்னர் நிறுத்தப்பட்டது. மாத பூஜை மற்றும் திருவிழா, சிறப்பு பூஜை நாட்களில் மட்டும் படிபூஜை நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், 18 ஆண்டுகளுக்கு பின், மண்டல பூஜை காலத்தில், படி பூஜை நேற்று நடத்தப்பட்டது. இந்த பூஜை, நவ., 24 வரை, தினமும் நடைபெறும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், 'ஆன்லைனில்' மாலை, 6:30 மணி முதல், இரவு, 8:00 மணி வரை தரிசன முன்பதிவு செய்த பக்தர்களும், படி பூஜை நடக்கும் நேரத்தில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.12 இருக்கை வாகனத்திற்குபம்பை வரை அனுமதி கடந்த ஆண்டு, கேரளாவில் பெய்த பெருமழையில், பம்பை சாலைகள் உருக்குலைந்தது. இதனால், கடந்த ஆண்டு சபரிமலை பக்தர்கள் செல்லும் வாகனங்கள், பம்பை வரை செல்ல தடை விதிக்கப்பட்டது. தனியார் வாகனங்கள் நிலக்கல்லில் நிறுத்தப்பட்டு, பக்தர்கள் கேரள அரசு பஸ்சில் சென்று வந்தனர். இதனால், பக்தர்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர். இந்த விவகாரத்தில், கேரள உயர் நீதிமன்றம், நேற்று உத்தரவு பிறப்பித்தது. அதன் விபரம்:பக்தர்கள் வரும் வாகனங்களில், 12 இருக்கைகள் வரை உள்ள தனியார் வாகனங்கள், பம்பை வரை செல்லலாம். பக்தர்களை இறக்கிய பின்னர் நிலக்கல்லில் நிறுத்தப்பட வேண்டும். தரிசனம் முடிந்த பின்னர், பம்பை வந்து பக்தர்களை அழைத்து செல்லலாம். பம்பை முதல் நிலக்கல் வரை ரோடு ஓரங்களில் வாகனங்கள் நிறுத்த தடை விதிக்கப்படுகிறது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
சபரிமலையில் உணவு விலை நிர்ணயம்
சபரிமலை சன்னிதானம், பம்பை, நிலக்கல் பகுதிகளில் உணவு பொருட்களுக்கு விலை நிர்ணயித்து பத்தணம்திட்டா கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். இதன்படி, வடை, போண்டா, சப்பாத்தி, புரோட்டா 10 ரூபாய்; ஆப்பம், இடியாப்பம் 9 ரூபாய்; கிழங்கு, பட்டாணி, கடலை கறி 25 ரூபாய்; வெஜிடபிள் குருமா, பருப்பு குருமா 20 ரூபாய்; தக்காளி குருமா 30 ரூபாய்; மெஷின் காப்பி 150 மில்லி 15 ரூபாய்; 200 மில்லி 20 ரூபாய்; சாப்பாடு 60 ரூபாய் என, நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இந்த விலைப்பட்டியலை தமிழ் உள்ளிட்ட ஆறு மொழிகளில் ஓட்டல்களில் வைக்க வேண்டும் என, பத்தணந்திட்டா கலெக்டர் பி.பி.நுாகு உத்தரவிட்டுள்ளார். அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டால், சபரிமலையில் உள்ள கட்டுப்பாட்டு அலுவலகத்தில் புகார் செய்யலாம். விரைவில், இதற்காக, இலவச போன் நம்பர் அறிவிக்கப்பட உள்ளது.