புதுச்சேரி : கவர்னர் கிரண்பேடி, சர்வாதிகாரி ஹிட்லரின் தங்கச்சிபோல் அடக்கு முறைகளை கையாள்கிறார் என, முதல்வர் நாராயணசாமி ஆவேசமாக பேசினார்.
புதுச்சேரி காங்., அலுவலகத்தில் நடந்த முன்னாள் பிரதமர் இந்திரா பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற முதல்வர் நாராயணசாமி பேசியதாவது:முன்னாள் பிரதமர் இந்திரா, தாழ்த்தப்பட்ட, மலைவாழ் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் மேம்பட பல நலத்திட்டங்களை செயல்படுத்தி -யுள்ளார். ஆனால், காங்., ஆட்சியின் 60 ஆண்டு சாதனைகளை மூடி மறைத்து, தனது 5 ஆண்டு காலத்தில் மட்டுமே நாடு மிகப்பெரிய வளர்ச்சியை பெற்றதாக பா.ஜ., கூறி வருகிறது. ஆனால், நாட்டில் பொருளாதார வளர்ச்சி இல்லை, பணப்புழக்கம் இல்லை, தொழிற்சாலைகள் மூடப்பட்டு தொழிலாளர்கள் வேலை இழந்து வருகின்றனர்.
மத்திய பா.ஜ., அரசின் செயல்பாடுகளை மக்களிடையே கொண்டு செல்ல, டில்லியில் வரும் 30ம் தேதி காங்., சார்பில் பேரணி நடத்தப்படுகிறது. இந்த போராட்டத்தில் பங்கேற்க விரும்புவோர் பெயரை பதிவு செய்யலாம். அதே போன்று, மாநில காங்., சார்பில் போராட்டம் நடத்தப்படும்.கவர்னர் கிரண்பேடி, மக்கள் நலத்திட்டங்களை தடுத்து நிறுத்தி வருகிறார். தீபாவளி போனஸ், அரசு ஊழியர் சம்பளம் உள்ளிட்ட 39 கோப்புகளை கவர்னருக்கு அனுப்பி வைத்தேன். ரூ.10 கோடி வரையிலான நிதி செலவிற்கு முதல்வர், அமைச்சர்களுக்கு அதிகாரம் உள்ளது.
அதனால் அந்த கோப்புகள் எதுவும் அவருக்கு அனுப்பத்தேவையில்லை. ஆனால் ஒரு ரூபாய் செலவு செய்வதாக இருந்தாலும் எனக்கு கோப்பு அனுப்ப வேண்டும் என்று கூறி அமைச்சரவையை கொச்சைப்படுத்தும் வகையில் செயல்பட்டார். பின்னர் கோப்புகளையும் அனுப்பி வைத்தேன். கடைசி நேரத்தில் அனுமதி கொடுத்து மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்தினார்.மக்களால் தேர்வு செய்யப்பட்ட எம்.எல்.ஏ.,க்கள், அமைச்சர்கள், முதல்வர் இருக்கும்போது முடிவு எடுக்க கவர்னருக்கு யார் அதிகாரம் கொடுத்தது.
புதுச்சேரி மாநில வளர்ச்சியில் கவர்னருக்கு அக்கரை இல்லை. இவை அனைத்திற்கும் இம்மாதம் முற்றுப்புள்ளி வைக்கப்படும். நாங்கள் வெளிநாடு செல்ல கவர்னரிடம் அனுமதி பெற வேண்டும் என விதி உள்ளதா. கவர்னர் கிரண்பேடி சர்வாதிகாரி ஹிட்லரின் தங்கச்சி போல் செயல்படுகிறார்.நான் கவர்னரின் வேலைக்காரனா? நாங்கள் யாருக்கும் அடிமை இல்லை. கவர்னருக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இதுபோன்று எந்த மாநிலத்திலும் கவனர்கள் நடந்துகொண்டதில்லை. இவ்வாறு அவர் பேசினார்.
அதிகாரிகள் கணக்கு தீர்க்கப்படுவர்முதல்வர் நாராயணசாமி பேசுகையில், புதுச்சேரி அதிகாரிகளுக்காக பரிதாபப்படுகிறேன். விதிப்படி செயல்படுங்கள் எனக் கேட்டு கொள்கிறேன். நானும், அமைச்சர்களும் விதி மீறி செயல்பட கூறவில்லை. கவர்னர் கிரண்பேடி அதிகாரிகளை அவமானப்படுத்தும் வகையில், நான் சொல்வதை செய்யாவிட்டால் நடவடிக்கை எடுப்பேன் என மிரட்டுகிறார். தலைமை செயலர், செயலர்கள் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளும் அமைச்சர்கள், முதல்வர் சொல்வதை கேட்டு செயல்பட வேண்டும் என, கோர்ட் தீர்ப்பு கூறியுள்ளது. ஆனால், அதிகாரிகள் அப்படி நடந்து கொள்ளவில்லை.கோப்புகளை அவமதித்த அதிகாரிகளும் சிறைக்கு செல்வார்கள். அதிகாரிகளும் கணக்கு தீர்க்கப்படுவர் என, எச்சரிக்கை விடுத்தார்.