சென்னை : சென்னையில், நடைபாதைகளில் அனுமதியின்றி நிறுத்தப்படும் வாகனங்களை அகற்ற, உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த, ஆடிட்டர் வந்தனா சக்காரியா என்பவர் தாக்கல் செய்த மனுவில், சென்னையில் நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றவும், ஆய்வு மேற்கொள்ள சிறப்புக் குழுவை அமைக்க, மாநகராட்சி ஆணையர் மற்றும் போலீஸ் ஆணையருக்கு உத்தரவிடவும் கோரியிருந்தார்.மனு, நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், என்.சேஷசாயி அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது. என்.எஸ்.சி., போஸ் சாலையில், நடைபாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளையும், அங்கு நிறுத்தப்படும் இரு சக்கர வாகனங்களையும் அகற்றி, அறிக்கை அளிக்கவும், மாநகராட்சி அதிகாரிக்கு உத்தரவிட்டனர்.
இதையடுத்து, வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஆஜராகி கூறியதாவது: சென்னையில், வாகனங்களை நிறுத்துவதற்காக, ௬௫ இடங்களில், ௫௫௦ கோடி ரூபாய் மதிப்பீட்டில், அடுக்குமாடி வளாகம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இதில், 3.5 லட்சம் வாகனங்களை நிறுத்த முடியும். சென்னையில், ௧௧ லட்சம் நான்கு சக்கர வாகனங்கள்; ௫௪ லட்சம் இரு சக்கர வாகனங்கள் உள்ளன.மாநகராட்சியின் ௧௫ மண்டலங்களில், ௪௦ ஆயிரம் நடைபாதை வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. எந்த பகுதியில் முழு நேர அனுமதி; எங்கு பகுதி நேர அனுமதி வழங்கலாம் என்பது குறித்து திட்டம் உருவாக்கப்படும். ஓராண்டுக்குள், இந்த திட்டம் நிறைவேற்றப்படும்.தி.நகர் பாண்டிபஜாரில், நடைபாதை விரிவுபடுத்தப்பட்டு, புதுப்பொலிவுடன் திகழ்கிறது. அங்கு, வாகன நிறுத்தம், வியாபாரம் நடப்பதை தடுக்க, தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட உள்ளது. இவ்வாறு ஆணையர் கூறினார்.இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:சென்னை மாநகரில், நடைபாதைகளில் நிறுத்தப்படும் வாகனங்களை உடனடியாக அகற்ற, நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விஷயத்தில், மாநகராட்சி மற்றும் போக்குவரத்து போலீஸ் இணைந்து செயல்பட வேண்டும். எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.விசாரணையை, டிச., ௧௮க்கு, நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.