புதுச்சேரி : மணக்குள விநாயகர் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மையம் துவங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, கல்லுாரி இயக்குனர் ராஜகோவிந்தன் கூறியதாவது:எங்கள் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மையம், நேற்று முதல் செயல்படுகிறது. கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணரான விவேகானந்தன், மையத்தின் தலைமை அறுவை சிகிச்சை நிபுணராக பணியாற்றுகிறார்.
இம்மருத்துவமனையில் இதய நோய், நரம்பியல், மருத்துவம், இதய மற்றும் ரத்த நாள அறுவை சிகிச்சை, குடல் இரைப்பை மற்றும் கல்லீரல் மருத்துவம், பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை, சிறுநீரக அறுவை சிகிச்சை, மூளை மற்றும் தண்டுவட நரம்பியல் அறுவை சிகிச்சை, உயர் அறுவை சிகிச்சை பிரிவுகள் சிறந்த முறையில் நடந்துவருகிறது.ஜிப்மர் முன்னாள் கண்காணிப்பாளர், சீனியர் இதய சிகிச்சை நிபுணர் பாலச்சந்தர், மருத்துவக் கல்லுாரி உயர் மருத்துவ சிகிச்சை டீன் ஆக பொறுப்பேற்றுள்ளார்.
இம் மருத்துவமனையில் வாரந்தோறும் நான்கு அல்லது ஐந்து பேருக்கு இதய அறுவை சிகிச்சையும், எட்டு முதல் பத்து பேருக்கு ஆஞ்ஜியோபிளாஸ்ட் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ரெட்டியார்பாளையத்தில் உள்ள மணக்குள விநாயகர் நகர மையத்தில், வாரந்தோறும் சனிக்கிழமைகளில் டாக்டர் பாலச்சந்தர் சிறப்பு மருத்துவ ஆலோசனை வழங்க உள்ளார். இவ்வாறு, ராஜகோவிந்தன் தெரிவித்தார்.