கோவை:சிறிய அளவிலான தோல்வியை கூட ஏற்க முடியாமல், 'சைல்டு லைன்' இலவச அழைப்புக்கு, ஆசிரியர்கள் மீது மாணவர்கள் புகார் கூறுவது அதிகரித்துள்ளது.குழந்தைகளுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் அரங்கேறும் பட்சத்தில், 'சைல்டு லைன்' எனும், 1098 என்ற எண்ணை தொடர்பு கொண்டால், உரிய துறை அதிகாரிகளுடன் இணைந்து, விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்.
கோவை மாவட்டத்தில், இந்த எண்ணுக்கு மாதந்தோறும் கிட்டத்தட்ட, 150 அழைப்புகள் மாணவர்களிடம் இருந்து பெறப்படுகின்றன.குழந்தை திருமணம், இடைநிற்றல், பாலியல் சீண்டல் குறித்த புகார், குழந்தைகள் முன்வந்து தெரிவிப்பது, ஆரோக்கியமான வளர்ச்சி குறியீடாகும். ஆனால், சமீபகாலமாக மாணவர்களிடம் இருந்து, வித்தியாசமான புகார்கள் பதிவு செய்யப்படுவதாக, 'சைல்டு லைன்' ஊழியர்கள் தெரிவித்தனர்.குறிப்பாக, வீட்டுப்பாடம் செய்யாமை, முடியை ஒழுங்காக வெட்டாமல் வருகை புரிதல், வகுப்பு தேர்வுகளில் மதிப்பெண் குறைந்ததால் சக மாணவர்கள் முன்னிலையில் கண்டித்தல் என, ஆசிரியர்கள் மீது, சரமாரியாக புகார்கள் பதிவாகியுள்ளன. இதை ஆய்வு செய்யும்போது, மாணவர்களிடம் தவறு இருந்தால், 'கவுன்சிலிங்' அளிக்கப்படுகிறது. ஆசிரியர்கள் மீதான புகார்களை, கல்வித்துறையிடம் தெரியப்படுத்தி, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குழந்தைகளின் உரிமை குறித்து பள்ளிகளில் கருத்தரங்கு மூலம், விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். மனதளவில் புண்படும்படி, குழந்தைகளை பேசினால் கூட, வன்முறையாக கருதப்படுவதால், வகுப்பறை நிகழ்வுகளால் பாதிக்கப்பட்டவர்களின் புகார்களை தவிர்க்க முடியாது. பெரும்பாலான அழைப்புகளில், சிறிய அவமானம், தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாமல் பதிவு செய்யப்படும் வகுப்பறை நிகழ்வுகளாகவே உள்ளது. இதற்கு, மாணவர்களுக்கு, 'கவுன்சிலிங்' அளித்து வருகிறோம்.உமா மகேஸ்வரி,மாவட்ட ஒருங்கிணைப்பாளர், 'சைல்டு லைன்'.