சிவகங்கை : சிவகங்கை அரசு மருத்துவமனையில் 'பார்மசிஸ்ட்' பற்றாக்குறையால் மாத்திரை வாங்க நோயாளிகள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.
இங்குள்ள வெளிநோயாளிகள் பிரிவில் தினமும் 1,300 பேர் சிகிச்சைக்காக வருகின்றனர். காய்ச்சல் பரவி வருவதால் குழந்தைகள் வருகை அதிகரித்துள்ளது. டாக்டர்களிடம் ஆலோசனை பெறும் நோயாளிகளுக்கு, கம்ப்யூட்டர் மூலம் மருந்து, மாத்திரைகளை டாக்டர்கள் பரிந்துரை செய்கின்றனர். சென்னை சர்வர் இணைப்பில் உள்ளதால் மாத்திரை வழங்கும் இடத்தில் உள்ள கம்ப்யூட்டரில் நோயாளிகளுக்கான மாத்திரை பட்டியல் வரும். அங்குள்ள பார்மசிஸ்ட் மருந்து, மாத்திரைகளை வழங்குவர்.
ஏற்கனவே வெளிநோயாளிகள் பிரிவு தரைத்தளம் மற்றும் முதல் தளத்தில் ஆண், பெண் நோயாளிகளுக்கு தலா 2 மாத்திரை வழங்கும் அறை வைத்திருந்தனர். முதல் தளத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன், மாத்திரை வழங்கும் அறைக்குள் பணிபுரிந்த ஒருவர் கொலை செய்யப்பட்டார். இதனால் முதல் தளத்தில் மாத்திரை வழங்கும் பணி நிறுத்தப்பட்டது. அனைத்து பிரிவுக்கும் தரைத்தளத்தில் உள்ள அறையிலேயே மாத்திரை வழங்குகின்றனர்.
நோயாளிகள் வருகைக்கு ஏற்ப மருந்து, மாத்திரைகள் வழங்க 15 'பார்மசிஸ்ட்கள்' நியமிக்கப்பட வேண்டும். ஆனால், இங்கு ஆட்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் மாத்திரை வாங்க நீண்ட வரிசையில் கால் கடுக்க காத்திருக்கின்றனர்.இது குறித்து 'பார்மசிஸ்ட்களிடம்' கேட்டால், அடிக்கடி சர்வர் பழுதாவதால், டாக்டர்கள் பரிந்துரைக்கும் மாத்திரை பட்டியலை விரைந்து எங்களால் பார்க்க முடியவில்லை. சர்வர் சரியானதும் தான் அவற்றை பார்த்து வழங்க முடிகிறது. இதனால் தாமதம் ஏற்படுகிறது என்கின்றனர்.
பார்மசிஸ்ட் பற்றாக்குறை: மருத்துவ அதிகாரி ஒருவர் கூறியதாவது: இங்குள்ள 'பார்மசிஸ்ட்' காலிபணியிடங்களை நிரப்ப, ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து 5 பார்மசிஸ்ட்கள், சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளனர். அங்குள்ளவர்களை விடுவிக்காததால், பார்மசிஸ்ட் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. சர்வர் பழுது அவ்வப்போது ஏற்பட்டு, உடனே சீராகி விடும். முதல் தளத்தில் செயல்படாமல் உள்ள 2 மருந்தகத்தை திறக்க டீன் உத்தரவிட்டுள்ளார். அங்கு திறந்தால் இவ்வளவு கூட்டம் வராது, என்றார்.