அபிராமம் : கமுதி அருகே பரளையாற்றில் சாக்கு மூடையில் மணல் நிரப்பி லாரியில் நுாதன முறையில் மணல் திருட்டில் ஈடுபட்ட லாரியை பறிமுதல் செய்து 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
அபிராமம் பரளையாற்றில் மணல் திருடப்படுவதாக அபிராமம் தனிப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அபிராமத்தில் இருந்து கண்ணத்தான் விலக்கு ரோட்டில் ரோந்து பணியில், எஸ்.பி., தனிப்பிரிவு போலீசார் சந்திரன் ஈடுபட்ட போது, அவ்வழியே சென்ற மினி லாரியை தடுத்து நிறுத்தினார். லாரி நிற்காமல் சென்றதால் ஒரு கி.மீ., டூவீலரில் விரட்டிச் சென்று லாரியை மடக்கி பிடித்தார். லாரியை சோதனையிட்ட போது பரளையாற்றில் இருந்து மணலை மூடைகளாக கட்டி திருடி சென்றது தெரிய வந்தது.
லாரி உரிமையாளரும், டிரைவருமான அபிராமம் பள்ளப்பச்சேரியை சேர்ந்த கதிரேசன் மகன் சுரேஷ்குமார் 25, முருகேசன் மகன் செல்லப்பாண்டியன் 18, ராமசாமி மகன் சூரிய பிரகாஷ் 21, மகேந்திரன் மகன் சுந்தர் 18, குமார் மகன் மாதேஸ்குமார் 16, ஆகிய 5 பேர் மீது அபிராமம் போலீசார் வழக்கு பதிந்து கைது செய்தனர். மணல் திருட்டுக்கு பயன்படுத்திய மினி லாரியை பறிமுதல் செய்து மேல் நடவடிக்கைக்காக பரமக்குடி ஆர்.டி.ஓ., வுக்கு பரிந்துரை செய்தனர்.