மானாமதுரை, :மானாமதுரை வைகை கரையோரம் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து கிணறுகளில் நீர் மட்டம் உயர்ந்ததை அடுத்து விவசாயிகள் விவசாய பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட பாசனத்திற்கு கடந்த 9ந் தேதி வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் மானாமதுரை வழியாக கடந்த சில நாள்களுக்கு முன்பு ராமநாதபுரம் பெரிய கண்மாயை சென்றடைந்தது.இதனையொட்டி மானாமதுரை வைகை கரையோரம் உள்ள ராஜகம்பீரம், பீசர்பட்டணம், முத்தனேந்தல், கால்பிரவு போன்ற பகுதிகளில் உள்ள விவசாய கிணறுகளில் நீர் மட்டம் உயர்ந்ததை அடுத்து விவசாயிகள் தினந்தோறும் தங்களது வயல்களுக்கு தேவையான நேரத்தில் தண்ணீர் பாய்ச்சுவதால் பயிர்கள் நன்றாக செழிப்பாக வளர்ந்து வருகிறது.
இது குறித்து ராஜகம்பீரம் விவசாயி பாட்சா 42, கூறுகையில்,வைகை ஆற்றில் தண்ணீர் வந்ததை அடுத்து ஆற்றை ஒட்டியுள்ள கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது,இதனால் பயிர்கள் செழிப்பாக வளர்ந்து வருகிறது. ஆனாலும் உரத் தட்டுப்பாடு நிலவுகிறது,மேலும் கண்மாயில் போதிய அளவு தண்ணீர் இல்லாததால் அனைத்து பகுதி விவசாயிகளும் விவசாயம் செய்ய முடியாத சூழ்நிலையில் உள்ளனர்,ஆகவே கூடுதலாக வைகையில் சிவகங்கை மாவட்ட பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்றார்.