மதுரை : தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை வீதிகளில் நடக்கும் கற்கள் பதிக்கும் பணியை மாநகராட்சி தீவிரப்படுத்தி உள்ளது.
நகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புராதன சின்னங்கள் புனரமைக்கப்படுகின்றன. மீனாட்சி அம்மன் கோயிலை சுற்றி அமைந்துள்ள 4 சித்திரை வீதிகள், பூங்கா மேம்பாட்டு பணிக்காக ரூ.15.24 கோடி ஒதுக்கப்பட்டது. அதன்படி சித்திரை வீதிகளில் ஏற்கனவே பதிக்கப்பட்டிருந்த பேவர் பிளாக் கற்கள் பெயர்க்கப்பட்டு, பழமையை பறைசாற்றும் வகையில் செதுக்கப்பட்ட கருங்கற்கள் பதிக்கும் பணி துவங்கியது.இப்பணி ஆமை வேகத்தில் நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அவதியடைந்தனர்.இதை தினமலர் நாளிதழ் சுட்டிக்காட்டியது.
இதன் எதிரொலியாக தற்போது பணிகள் தீவிரமடைந்துள்ளன. விரைந்து முடிக்க ஒப்பந்ததாரருக்கு மாநகராட்சி உத்தர விட்டுள்ளது.அதிகாரிகள் கூறியதாவது: சித்திரை வீதிகளில் கருங்கற்கள் பதிக்க 2020 ஜனவரி வரை கால அவகாசம் உள்ளது.இங்கு கழிவுநீர் கால்வாய், குடிநீர் பைப் லைன் அமைக்கும் திட்டங்களும் இருந்தன. இப்பணிகளை முடிக்காமல் கற்களை பதித்தால் மீண்டும் தோண்ட வேண்டிய நிலை வரும். எனவே இவ்விரு வேலைகளையும் முதலில் முடிக்க நடவடிக்கை எடுத்தோம். இப்பணிகள் முடிந்ததால் கற்கள் பதிக்கும் பணி தீவிரமாக நடக்கிறது. ஜனவரிக்குள் முடித்துவிடுவோம் என்றனர்.நேற்று இப்பணிகளை கமிஷனர் விசாகன் ஆய்வு செய்தார்.