வத்தலக்குண்டு : 58 கிராம கால்வாயில் தண்ணீர் திறக்க வலியுறுத்தி பாசன வாய்க்காலை ஒட்டி உள்ள கிராமங்களில் இன்று கடையடைப்பு போராட்டம் நடக்கிறது.
விருவீடு, உசிலம்பட்டி பகுதிகளிலுள்ள கண்மாய்களை வைகை அணை மூலம் நீர் நிரப்ப 23 ஆண்டுகளுக்கு முன்பு 58 கிராம கால்வாய் திட்டம் உருவானது. அணையில் 68 அடி கொள்ளளவு இருக்கும்போது இக்கால்வாயில் தண்ணீர் திறக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. கடந்த ஆண்டு பணிகள் முடிந்து வெள்ளோட்டம் பார்க்கப்பட்டது.இந்த ஆண்டு முதல் தண்ணீர் திறக்கப்படும் என விவசாயிகள் எதிர்பார்த்து இருந்தனர்.
ஆனால் ராமநாதபுரம் பகுதி விவசாயிகளுக்காக 4 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டதால் அணையின் கொள்ளளவு 65 அடியானது. இதனால் விரக்தியடைந்த உசிலம்பட்டி, விருவீடு பகுதியினர் இன்று (நவ.20) ஒருநாள் கடையடைப்பு போராட்டம் நடத்துகின்றனர். 'வரும் காலங்களிலாவது அணையின் கொள்ளளவு 68 கன அடியாக இருக்கும் போது 58 கிராம கால்வாயில் தண்ணீர் திறக்க வேண்டும்' என, விவசாய சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.